ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அக்டோபர் 29ல் அளவிடப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Judges sathiyanarayana bench ordered
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அக்டோபர் 29ல் அளவிடப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல
மனுவில், “சென்னை அடுத்துள்ள திருப்போரூரில் உள்ள அருள்மிகு கந்தசாமி
கோவிலுக்கும், ஆளவந்தார் அறக்கட்டளைக்கும் சொந்தமாக சுமார் 2 ஆயிரம்
ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றின் மதிப்பு
ரூ.60 ஆயிரம் கோடியாகும். இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க பல மோசடி கும்பல்கள் முயற்சி செய்கின்றன. எனவே, இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய திருப்போரூர் சார் பதிவாளருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா
ஆகியோர் முன்பு கடந்த முறை விசாரணை வந்தபோது இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், “ஆளவந்தார் அறக்கட்டளைக்கு மட்டும் 1054 ஏக்கர் நிலம் உள்ளது. எனவே இந்த நிலத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் அளந்து, நிலங்களை அடையாளம் காணவேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் கார்த்திகேயன், “ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் அக்டோபர் 29 (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் அளவிடும் பணி தொடங்க உள்ளது. அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என்று கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டனர்.