இருக்கிறேன்’ ‘இருக்கிறோம்’ ‘இருப்போம்’ எப்போதும் என்போம்…..(வே.பாலு. வழக்கறிஞர். சென்னை.)….
இருக்கிறேன்
இருக்கிறோம்
இருப்போமா?
எல்லா மனங்களயும்
மிரட்டும் கேள்வி…
இழுத்து மூச்சு விடவும்
இழுத்த மூச்சை விடவும்
பயந்து
இருக்கும்
மூச்சும்
விட்டு விடுமோ?
என்ற வினா
பாம்பு படமாய்த்
துரத்துகிறது..
நேற்று வரையிலும்
எனக்கென்ன என்று
நடந்தவனெல்லாம்,
இன்று
எனக்கு என்ன?
என்று
தடவிப்பார்க்கிறான்….
காயமே இது பொய்யடா
என்று
சித்தனாகவும்,
அத்தனைக்கும் ஆசைப்படாத
புத்தனாகவும்
மறுசுழற்சி புனலில்
நீச்சல் அடிக்கிறான்..
வானமும் மேகமும்
காற்றும் கடலும் வகுப்பெடுத்து
ஓய்ந்தன..
விண்ணுக்கும் மண்ணுக்கும்
புகையால் செய்த
பகை.
இயற்கையின்
கருவறைக்குள்
ஒலி செயத வலி…
மதங்களின் பெயரால்,
நில்லாத போரால்,
விழுந்த குண்டுகளால்
வெடித்து சிதறிய
துர்நாற்றம்…
மனிதனைக்கீறி
இரத்தம் குடிக்க
நாவுகள் நீட்டிய
சர்வாதிகாரத்தின்
சதி ஆயுதங்கள்..
பெண்ணைச் சிதைத்து
வன்மக் கலவியில்
இனப்பகை தீர்த்த
துப்பாக்கி முனைகள்..
இடைவிடாது
24 மணி நேரமும்
அவள் காதறைந்த
ஒலிப்பான் ஓலங்கள்..
மானுடத்தின் தோள் மீது
ஏற்றி இறக்கிய
போலிப் பொதிகள்..
எப்படி இறக்குவது?
எப்பொழுது இறக்குவது?
என்று வலியால் தவித்து
அழுது முடித்த
இயற்கை கண்ணகி
எழுந்து நிற்கிறாள்..
உயிர்களை மதிக்காத
மனித குலத்திற்கு
‘உயிரி’ மூலமாய்
வகுப்பெடுக்கிறாள்
வரலாற்றுத்
தாய்…
உயிரை எடுக்க
ஆயுதம் செய்தோர்க்கு
உயிரியே ஆயுதமாய்…
எழுந்து நிமிர்த்தி
தோள் சிலிர்த்து
‘நான்’ ‘நான்’ என்று
அதிர்ந்த குரல்வலைகள்
அமைதிக்குகைக்குள்
அடக்கம்….
உணர்ந்து பாருங்கள்,
ஓசையற்ற உலகில்
உள்ளொலி ஒன்று
ஓங்காரமெடுக்கும்….
நானும் நீயும்
நாமும் செய்த
தீமைகளின் தீட்டு
வாடை
நாசிகளில் படியும்
தூசுத்துகளாய்..
அன்பழித்தோம்
அறிவழித்தோம்
அழிப்பேன்.. ஒழிப்பேன்
என்ற அத்தனை
கர்வத்துக்கும்
அடக்கம் கற்றுத்
தருகிறாள் அன்னை..
‘அடங்கு’ இல்லையேல்
‘அடக்கம்’
என்கிறாள்….
ஐயோ! கடவுளே!
காப்பாற்று! என்று
அலறி ஓடினான்.
உன்னைப் போன்ற
மனிதனின் செயலால்
சத்தியம் தொலைத்த
மனிதகுலத்தால்
எனக்கே அவமானம்
என்று எல்லாக்
கடவுளும் கதவைச்
சாத்தினர்….
என்மதம் உன்மதம்
என்று பூகோள
பரப்பில் ஒலித்த
அத்தனை குரல்களும்
நிறம் சுமந்து அலைந்த
அத்தனை கொடிகளும்
நிறக்குருடாயின…
யாரோ ஒருவரது
ஆராய்ச்சிக் கூடத்தில்
யாரையோ ஒழிக்க
இரகசியம் செய்த ஆயுதம்
என்ற
வதந்திகளின்
வலம்…
அல்ல…
இவை
வெறுப்பு விதைத்து
வெறுப்பு வளர்த்த மனித
விலங்கின் மீது,
இயற்கை அன்னை
கழித்த
மலம்…
அவள் ‘காலக்கடன்’
கழிக்கிறாள்..
நாம் கை கால்
கழுவுகிறோம்..
மங்கோலிய முகம் மீது
காகேசியன் எச்சில் துப்ப
ஐரோப்பா அழுக
ஆசியா அழுகிறது..
நகம் கொண்டு கீறினான்
முகம் கொண்டு சீறினான்
அன்னையின் தடையால்
நகலும் முகமும்
சேரக்கூடாதாம்.
அரிக்கும் முகம் தொட
அஞ்சுகிறது கரம்…
இது,
அகத்தால் அழிக்கப்பட்ட
புறம்.
எனவேதான்
ஓடவும் முடியாது,
ஒளியவும் முடியாது,
என்று,
பிரம்பெடுக்கிறான்
பெருந்தலைவன்..
விரட்டி அடிக்கப்பட்ட
எல்லா பறவைகளின்
முனகல்கள் அடங்கி
அதனதன் குரல்
இப்போதுதான்
வான் தொடுகின்றன…
சிட்டுக்குருவி கூட
மறுபிறப்பெடுக்கலாம்..
இரவின் தனிமை பயத்தை
சில் வண்டுகளின்
ரீங்காரத் தாலாட்டே
உறங்க வைக்கின்றன..
ஐயனாருக்கும்,
சுடலை மாடனுக்கும்,
பெரியகருப்பனுக்கும்,
மாரியாத்தாளுக்கும்,
காளிய்சத்தாளுக்கும்,
தமிழன் கட்டிய
‘காப்பு’ இப்போது
உலகைக்காக்கும்
ஆயுதமாக்றது…
‘ தனித்திரு’ என்றார்,
கேட்கவில்லை.
‘விழித்திரு’ என்றார்,
தூங்கிப் போனோம்.
‘பசித்திரு’ என்றார்,
அறிவுப்பசி என்றறியாமல்
தின்றே தீர்த்தோம்.
இதோ,
சொன்னவர் எரிந்து
சோதியானார்.
சொன்னது சோதியாகி
உலக நீதியானது..
எல்லா மரபுகளையும்
உடைத்த நம்மை
கண்ணகி உடைத்த
காற்சிலம்பு போல்
நீதி கேட்டு
நிறுத்திக் கேட்கிறாள்
இயற்கை….
அமைதிமுகம் காட்டினால்
அடங்கமாட்டாய் என்று
கோரமுகம் காட்டுகிறாள்..
ஒன்றுக்கொன்று
தோளுரசிக்கொண்ட
தேசக்கோடுகள்
ஐந்தடி தூரம் நின்று
நலம் விசாரிக்கின்றன…
பூமத்தியரேகை கூட
புரண்டு படுக்கலாம்..
அத்தனை அட்டூழியம்..
இயற்கை கொன்று
மதம் கொண்டான்..
‘மதம்’என்றான்..
இல்லை ..இல்லை..
‘மனிதம்’என்றாள்..
காடழித்து கலகம்
செய்தோம்
நீரழித்து நிலமழித்து
வீடழித்து விண் தொடும்
வீதி செய்தோம்..
இயற்கை இப்போது
‘விதி’ செய்கிறது..
‘கைகூப்பு’
‘வணக்கம் சொல்’
‘தொடாதே’
‘உன் காற்றே அசுத்தம்’
‘பக்கம் வராதே’
உன்னைப் பார்க்கவே
உனக்குப் பிடிக்காமல்,
‘ஐந்தடி’ என்று
ஆணை இடுகிறாள்…
மரணத்தின் பெருங்குரல்
அடக்க,
அதன் ஓசை உணர,
மௌனத்தின் பேரிரைச்சலை
உணர்த்த,
‘அமைதி’ என்கிறாள்..
இதோ,
கொஞ்சம் கட்டிய
கைகளின் பணிவிற்கே
திமிங்கிலங்கள்
கரை தொட,
காற்று மகரந்தம் சூடிய
சங்கீதப் பறவைகளின்,
சிறகுகள் தொட்ட
அயல்மகரந்தச்சேர்க்கை
உலக வீதிகளில் உலா வருகிறது….
நாம் நம்மைக் காப்பது
என்ற விதியே,
அவள் சொன்ன
‘நீயே அதுவாகி நிற்கிறாய்’…..
முரசறைந்த மன்னன் போல்
அரசறைந்து சொல்வதைகேளுங்கள்..!
தன்மூச்சு மறந்து
நம் மூச்சு காக்கப்
பாடுபடும் மருத்துவரை
வணங்குங்கள்..
வெயில், மழை தெரியாத
வீதிகளுக்கு வரும்காவலருக்கு
ஐந்தடியில் நின்று
அன்பு காட்டுங்கள்…
கொம்புளதற்கு ஐந்து
குதிரைக்குப் பத்து
முழம், வெம்புகரிக்கு
ஆயிரம்தான் வேண்டுமே,
என்ற பழந்தமிழ், வம்பருக்கு தூரம் வைக்காது
கண்ணில் படாதே என்றது..
வாட்ஸப் கொண்டு
வதந்’தீ’ வைக்காதீர்கள்…
அமைதியாய்..
ஆழமாய்..
புரண்டு…
மீண்டு(ம்)
ஆழ்ந்து…
நம்பிக் கண் மூடுங்கள்…
நாளையும் விடியும் என்று…
அந்த உலகத்தில்
பாட்டுப் பறவையோடு,
கூட்டுக்குடும்பத்தின்,
அறுந்த இழைகளை
நேர் செய்து நெய்யுங்கள்…
இழந்த இசை மீட்போம்..
பேசாமல் கிடந்த
பேரன்பைத் தேடுவோம்..
அன்னாதைகளாய்
விடப்பட்ட
அப்பனை, அம்மாவைத்
தேடிச் சோறு நிதம் தின்போம்…
கலைந்த நட்புக் கூடுகளின்
குச்சிகள் தேடும்
அலகாவோம்…
ஒற்றைப் பானையில்
ஊருக்கே சமைப்போம்..
மீண்டும் எழுந்தமர்ந்து
உலகம் ஒரு வீடென்போம்…
அன்றைக்கு,
‘இருக்கிறேன்’
‘இருக்கிறோம்’
‘இருப்போம்’
எப்போதும்
என்போம்…..(வே.பாலு. வழக்கறிஞர். சென்னை.)….