இளவரசர் சார்லஸ்- முதல்வர் எம்ஜிஆர்

இளவரசர் சார்லஸ்- முதல்வர் எம்ஜிஆர்
____________________________________
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னைக்கு வந்திருந்தபோது அவரின் மாநகரச் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்றேன். உலகப் புகழ்பெற்ற கண்சிகிச்சை மருத்துவ மனையான சங்கர நேத்ராலயாவுக்கு இளவரசர் சார்லஸ் சென்றிருந்தார். அங்கு நடந்த விழாவில் சார்லஸ் உடன் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆரும் கலந்து கொண்டார்.
சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனரான பத்ரிநாத் எனும் கண்சிகிச்சை மருத்துவ நிபுணர், இங்கிலாந்து அரண்மனையின் அதிகாரபூர்வமான கண் மருத்துவராக இருந்தார். அந்த அரண்மனைச் செல்வாக்குக் காரணமாகத் தான் சங்கர நேத்ராலயா வுக்கு இளவரசர் சார்லசை வரவழைக்கக் கூடிய வாய்ப்பும் நெருக்கமும் பத்ரிநாத்துக்குக் கிடைத்தது. இளவரசர் சார்லஸ் வருகை தொடர்பான தகவலை அறிந்ததும் எம்ஜிஆருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எம்ஜிஆரும் அப்பொழுது முதல்வர் என்ற நிலையில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்.
வழக்கமாக எம்ஜிஆருடன் எத்தனை விஐபிக்கள் விழாவில் கலந்து கொண்டாலும் அதில் எம்ஜிஆர் தான் தனித்துத் தெரிவார். அதைத்தான் அவரும் விரும்புவார். ஆனால் அன்று நடந்த அந்த நிகழ்ச்சியின்போது, “இளவரசர் சார்லஸ் தான் முக்கியத்துவம் பெற வேண்டும்” என்பதில் எம்ஜிஆர் அதிக அக்கறை காட்டினார். இளவரசர் சார்லசுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய வகையில் தன்னைத் சுதாரித்து ஒதுக்கிக் கொண்டார் எம்ஜிஆர். மேடையில் பேசும்போது கூட
சார்லசுக்கு அதிகப்படியான நேரம் கொடுத்து பேச வைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பினார். அதன்படிதான் அவர் சார்லஸை பேசவும் அழைத்தார்.
ஆனால் மைக்கை பிடித்த இளவரசர் சார்லஸ், அரை நிமிடம் கூட பேசவில்லை. வாழ்த்து தெரிவித்த கையோடு தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.
எம்ஜிஆருக்கு மட்டுமல்ல., அரங்கில் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். ஆனால் சார்லஸின் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் பொருள் பொதிந்தது என்பதை அரச அந்தஸ்தில் இருக்கின்றோரின் மரியாதையை சொல்லிவிடும். அந்த
வகையில்தான் இளவரசர் சார்லஸ் ரத்தினச் சுருக்கமான உரையின் மூலமாகத் தன் அன்பை இந்தியத் துணைக் கண்டத்தின்பால் அவர் செலுத்தி விட்டுச் சென்றார். அந்த நிகழ்ச்சியை செய்தி எழுதுவதற்காக தினமலர் சார்பில் அடியேனும் இருந்தேன்.
சங்கர நேத்ராலயாவில் இளவரசர் சார்லஸ், எம்ஜிஆர் ஆகிய இருவரும் இறங்கி விழா மேடை நோக்கி நடந்தபோது எம்ஜிஆரை விட உயரமாகவும் கம்பீரமாகவும் ராஜ தோரணையுடனும் இளவரசர் சார்லஸ் நடந்து வந்ததை நான் பார்த்தேன். எம்ஜிஆரின் நூற்றுக்கணக்கான விழாக்களைச் செய்திகளாக்கியுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் மட்டும்தான் எம்ஜிஆரை விட மேலான ஒருவர் என்றவாறு விழா நிகழ்ச்சிகள் இருக்கக் கண்டேன். அதற்கு எம்ஜிஆரும் பெருந்தன்மையோடு ஒத்துழைத்து உடனிருந்தார். அதைப் பார்த்தபொழுது அவரின் பெருந்தன்மையை எண்ணிக்கொண்டேன். அது மெச்சத்தக்கது.
அடியேனின் பிறந்த நாளான( 13-12-1952) இன்று இத்தகைய ஒரு நினைவைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நூருல்லா ஆர் ஊடகன்
13-12-2020 9655578786

You may also like...