உச்சநீதிமன்றத்தின் அமர்வுகள் (BENCHES) இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

👆👆👆

உச்சநீதிமன்றத்தின் அமர்வுகள் (BENCHES) இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தின் அமர்வை (BENCH) தென் இந்தியாவில், சென்னையில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  நீதியரசர் என்.வி.ரமணாவிடம் கோரிக்கை வைத்தார். கடந்த மார்ச் மாதம் மதுரை யில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் இதே கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 

தலைமை நீதிபதி  நீதியரசர் என்.வி.ரமணா பதிலளிக்த்து பேசும்போது நாடாளுமன்றத்தில் இதை வலியுறுத்தி மூத்த மூத்த வழக்கறிஞர் மற்றும் அதன் உறுப்பினர் திரு பி.வில்சன் உச்ச நீதி மன்றங்களின் பிராந்திய கிளைகள் அமைக்க ஒரு தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார் என்றும் இதை ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை என்றும் பதிலளித்தார்.

இதை கவணிக்கும் போது தலைமை நீதிபதி  நீதியரசர் என்.வி.ரமணா இந்த தனி நபர் மசோதாவிற்கு ஆட்சேபனை இல்லை என்று தெள்ள தெளிவாகிறது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க…

இந்தியாவில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நீதிமன்றங்கள் மக்கள் அணுகக்கூடிய தொலைவில் பரவலாக்கப்படும் போது  தான் சட்டத்தின் ஆட்சியின் மீதும், ஜனநாயகத்தின் ஒரு தூணாக விளங்கும் நீதிமன்றத்தின் மீதும் மக்க ளுக்கு நம்பிக்கை ஏற்படும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சரத்து 214, ஒவ்வொரு மாநிலத் திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் அமைக்க  அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி தற்போது இந்தியாவில், 25 உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மேலும் மக்கள் எளிதாகவும், விரைவாகவும் செலவு குறை வாகவும் அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்து வதற்காக  பல மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட  உயர்நீதிமன்ற அமர்வுகள் (BENCH) உருவாக்கப் பட்டுள்ளன. சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, அசாம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமர்வுகளை (BENCHES) கொண்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 2004ஆம்  ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு (BENCH)  மதுரையில் அமைக்கப்பட்டது.  2004ஆம்  ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தின் தென் மாவட்டங் களில் உள்ளவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றால் நீண்ட தூரம் பய ணம் மற்றும் செலவு செய்துதான் வழக்கு தொடுக்க முடியும். தற்போது, மதுரையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் அமர்வு அமைக்கப்பட்டதால் தமிழகத்தில் உள்ள 13 தென் மாவட்ட மக்கள் பயன் அடைந்துள்ளா ர்கள். இதனால் மக்களுக்கு நேரமும், பணமும் மிச்ச மானது மட்டுமல்லாமல், உயர்நீதிமன்றத்தை எளிதில் அணுகக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது ஓரளவிற்கு குறைந்தும் வழக்காடிகள் சட்டத்தின் வழி நின்று தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கும், விரைந்து முடிப்பதற்கும்  சூழல் ஏற்பட்டுள்ளது.

மறுக்கப்படும் நீதி

 இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த ஒரு தேசத்தில் உச்சநீதிமன்றம் தில்லியில் மட்டும்  செயல்படுவது இந்தியாவின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள  மாநிலங்களில் உள்ள ஏழை, நடுத்தரப் பிரிவை சார்ந்த வழக்காடி களுக்கு தங்கள் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு கொண்டு செல்வது என்பது பெரும் கனவாகவே இருக்கிறது.  எல்லா இந்திய குடி மக்களாலும் உச்சநீதிமன்றத்தை  சமமாக அடைய  முடிவதில்லை. 2011ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி உச்ச நீதிமன்றத்திற்கு வரும் மேல் முறையீடு வழக்குகள் அதிகப்படியாக உச்சநீதிமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து (12%) வருகின்றன. அதேவேளையில் சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து வெறும் 1.1% வழக்குகள் தான் வரு கின்றன. இது உச்சநீதிமன்றத்திலிருந்து வெகுதூரத்தி லிருக்கும் தென்மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் இருக்கும் மாநிலங்களிலிருந்தும் மிக குறைவான வழக்குகளே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படு கின்றன.  மேல்முறையீடு செய்வதற்கு சட்ட ரீதியான  முகாந்திரம் இருந்தாலும் பெருவாரியான வழக்காடி களுக்கு மேல்முறையீடு  செய்வதற்கு செலவீனமும், தூரமும் பெரும் தடையாக உள்ளது. வசதி படைத்த ஒருசிலரால் மட்டுமே உச்சநீதிமன்றத்திற்கு செல்ல முடிகிறது.

வெறும் மேல்முறையீட்டு நீதிமன்றமா?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உத்தரவாதப்படுத்தியுள்ள அரசியலமைப்புச் சட்டம், அந்த நீதியை பெறுவதற்கு சமமான வாய்ப்பு அனைத்து  மாநிலங்களுக்கும் வழங்கப்படாமல் இருப்பது  ஒரு வகையில் நீதி மறுக்கப்பட்டதாகவேகருதமுடியும்.

உச்சநீதிமன்றங்களில் கடந்த 70 ஆண்டுகளில் வழக்குகள் படிப்படியாக பெருகி தற்போது 70,000 வழக்குகள் வரை நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றங்கள் அதிகப்படியாக மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கே தன் நேரத்தை செலவிட வேண்டி இருப்பதால் பல முக்கியமான அரசி யலமைப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க நேரம் இருப்பதில்லை என்கிற விமர்சனம் பல  ஆண்டுகளாக இருந்து வருகிறது. 1960 களில் உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்புச் சட்டம் சார்ந்த  வழக்குகளை விசாரிக்க 5 உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு ஆண்டுக்கு 100 முறை கூடியுள்ளது. ஆண்டுக்கு 70-80  வரையிலான அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த வழக்கு களில் தீர்ப்புகள் வெளிவந்தன. ஆனால் 1960களுக்கு பிறகு அரசியலமைப்புச் சட்ட அமர்வு ஆண்டுக்கு வெறும் 10 முறை தான் கூடியுள்ளது. பெரும்பாலும் பல மாநில உயர்நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளை தீர்ப்பதிலேயே தன்னுடைய பெரும்பகுதி நேரத்தை உச்சநீதிமன்றம் செலவளிக்கிறது. உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டம் சார்ந்து எழும் வழக்குகளை விசாரிக்க கூடிய நீதிமன்றமாக செயல்பட வேண்டுமே அல்லாமல் அது மற்றும் ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருக்கக் கூடாது என்று நீதியரசர் பகவதி ஒரு முறை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் திருத்தம் தேவையில்லை

நாடாளுமன்றத்தின் பல நிலைக்குழுக்களும், சட்டக்கமிஷன்களும், கடந்த பல பத்தாண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் அமர்வுகள் (BENCH) நாட்டின் பிற பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 1984ல் நீதிபதி கே.கே.மாத்யூ தலைமையில் அமைக்கப்பட்ட 10வது சட்டக்கமிஷன் அளித்த  அறிக்கையில்  உச்சநீதிமன்றம் (i) அரசிய லமைப்புச் சட்டப் பிரிவு (Constitutional division)  (ii)  சட்டப் பிரிவு (Legal division) என்று இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையே தான் 11வது சட்டக்கமிஷனும் பரிந்துரைத்தது. அதன் பிறகு  நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையில் அமைக்கப் பட்ட 18ஆவது சட்டக்கமிஷன் உச்சநீதிமன்றத்தின் வேலை முறை குறித்து 2009 ல்  தனது 229 வது சட்ட அறிக்கையில் விரிவான பல விஷயங்களை பரிந்துரைத்துள்ளது. அதன்படி உச்சநீதிமன்றம் அரசி யலமைப்புச் சட்டம் தொடர்பான விஷயங்களை  விசாரிக்கக்கூடிய அமர்வாக அமைக்கப்பட வேண்டும் என்றும், மேலும் உச்சநீதிமன்றத்தின் நான்கு அமர்வுகள் மேல்முறையீட்டு நீதிமன்றங்களாக நாட்டின் தென் பிராந்தியம் (சென்னை/ ஐதராபாத்) வட பிராந்தியம் ( தில்லி) கிழக்கு பிராந்தியம் (கொல்கத்தா) மற்றும் மேற்கு பிராந்தியத்தில் (மும்பை) அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. 

உச்சநீதிமன்றத்தின் இருப்பிடம் குறித்து அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 130 விளக்குகிறது. அதன் படி உச்சநீதிமன்றம் தில்லியில் அல்லது குடியர சுத்தலைவரின் அங்கீகாரம் பெற்று தலைமை நீதியரசர் அவ்வப்போது குறிப்பிடும் இடம் அல்லது இடங்களில் அமர்ந்து செயல்படுதல் வேண்டும் என்று  கூறுகிறது. இந்த விளக்கத்தின் படி உச்சநீதிமன்றம் தில்லியைத் தவிர வேறு இடத்திலிருந்தும் செயல்பட லாம் என்று தாராள பார்வையோடு எடுத்துக் கொண்டால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில்  திருத்தங்கள் எதுவும் கொண்டு வராமலேயே நாட்டின் நான்கு பிராந்தியங்களில்  உச்சநீதிமன்றத்தின் நான்கு அமர்வுகளையும் அமைக்க முடியும் என்று 299வது பிரிவு சொல்கிறது. நாட்டின் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே இதை செயல் படுத்திட முடியும். அதே வேளையில் மேற்படி சரத்துப்படி உச்சநீதிமன்ற அமர்வுகளை அமைக்க முடியாவிட்டால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொருத்தமான  சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.  

உலகில் தற்போது 55 நாடுகளில் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் தனியாக செயல்பட்டு வருகின்றன. இன்றைக்கு பல நாடுகளில்  அரசியலமைப்புச் சட்டங்கள் குறித்து எழும் வழக்குகள் குறித்து விசாரிப்ப தற்கு பிரத்யேகமாக அரசியலமைப்புச் சட்ட  அமர்வும் (CONSTITUTION BENCH)  உயர்நீதி  மன்றங்களுக்கு மேல் எழும் மேல் முறையீடுகளை விசாரிக்க பல உச்சநீதிமன்ற அமர்வுகளும் (CASSATION BENCHES) அமைக்கப்பட்டு செயல்பட்டு  வருவதை  நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தில்லியை உச்சநீதிமன்றத்தின் பிரத்தியேகமான இடமாக தேர்வு செய்யப்பட்டது என்பது பகுத்தறிந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல, இது தெற்கின் மீது  வடக்கு நடத்தும் கொடுங்கோன்மையை மையப்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் (Centralized system)  மூலம் கண் கூடாக பார்க்க முடிகிறது என்று  நீதியரசர்  வி.ஆர்.  கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். ஆகவே  உயர்நீதிமன்றத் தில் அமைக்கப்படுவது போல் உச்சநீதிமன்றத்திலும் பல அமர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

தற்போது 133 கோடி மக்கள் தொகை கொண்ட நம்  நாட்டில் 34 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் உள்ள னர். பிராந்திய அளவில் உச்சநீதிமன்றத்தின் அமர்வு கள் ஏற்படுத்துவதன் மூலம் இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்த முடியும்.  இதன் மூலம் தாமத மாக வழங்கப்படும் நீதியை தடுக்க முடியும். மேலும் வழக்காடிகளின் செலவுத் தொகை குறைக்கப்படும், நீதி  வேண்டி வழக்காடிகள் நெடுந்தூரம் பயணப்படுவதும் தடுக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் அமர்வுகள் அமைப்பதற்கான தேவை என்பது இன்றைக்கு அதி கரித்துள்ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்  தென் இந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்காக மக்க ளின் உணர்வை பிரதிபலிக்கக்கூடிய வகையில் கடந்த  2009 ல் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்  தலைமையில் கொச்சியிலும், 2012ல் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன்  தலைமையில் சென்னையிலும் சிறப்பு மாநாடுகளை நடந்தியுள்ளது கவனிக்கத்தக்கது. சமீபத்தில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய தென் மாநில பார்கவுன்சில் தலைவர்கள் தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.  உச்சநீதிமன்றத்தின் அமர்வுகளை நாட்டின் நான்கு பிராந்தியங்களிலும் அமைப்பதன் மூலமே மக்களுக்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்த முடியும். அதுவே சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் பயன் உள்ளதாக அமையும்.

You may also like...