ஒரு நடுத்தரக் குடும்பத்தை நீங்கள் அழித்துவிட்டீர்கள்: ரியாவின் தந்தை காட்டம்

Published : 06 Sep 2020 07:42 PM
Last Updated : 06 Sep 2020 07:45 PM
ஒரு நடுத்தரக் குடும்பத்தை நீங்கள் அழித்துவிட்டீர்கள்: ரியாவின் தந்தை காட்டம்
congratulations-india-you-have-demolished-a-middle-class-family-rhea-s-father-on-showik-arrest
மும்பை

ஒரு நடுத்தரக் குடும்பத்தை நீங்கள் அழித்துவிட்டீர்கள் என்று ரியாவின் தந்தை இந்திரஜித் சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தனியாக வழக்குப் பதிவு செய்து, ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரைக் கைது செய்தனர். இருவரையும் வரும் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து ரியா சக்ரபர்த்தியிடமும் விசாரணை நடத்தியுள்ளது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு.
இந்த விவகாரம் தொடர்பாக ரியா சக்ரபர்த்தியின் தந்தை இந்திரஜித் சக்ரபர்த்தி முதன் முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“வாழ்த்துகள் இந்தியா. நீங்கள் என் மகனைக் கைது செய்துவிட்டீர்கள். அடுத்து என் மகளாகத்தான் இருக்கும் என்று உறுதியாகத் தெரியும். அதற்கு அடுத்து யாரென்று எனக்குத் தெரியாது. ஒரு நடுத்தரக் குடும்பத்தை நீங்கள் அழித்துவிட்டீர்கள். ஆனால், நிச்சயமாக, நீதியின் பெயரால் அனைத்தும் நியாயப்படுத்தப்பட்டுவிட்டன. ஜெய்ஹிந்த்”.

You may also like...