காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர்

காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்ற கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி. இவர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை, வீட்டில் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாகக் கூறி தன்னிடம் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை கைது செய்தது .

பின்னர் இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்று அவர் வெளியே வந்தார்.

இந்நிலையில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீதான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு அதிகாரம் மிக்க நபர்கள் தொடர்பு இருப்பதால் தான் அவர் மீதான வழக்கில் இதுவரை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என வாதிடப்பட்டது. இதன் காரணமாக வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார் அஜராகி, விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகாக காத்திருப்பதாகவும் அதன் பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

இதனை ஏற்ற நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...