கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் மற்றும் எலங்கியம்மன் கோவில் நிதியில் இருந்து 16.30 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருந்து 13.50 கோடி ரூபாயும், பழனி தண்டாயுத பாணி கோவிலில் இருந்து 15.20 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தி முதியோர் இல்லங்கள் துவங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 12ம் தேதி அறநிலைய துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்படி கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், அறங்காவலர்கள் நியமனத்துக்காக அரசு குழுக்கள் அமைத்துள்ளதாக தலைமை வழக்கறிஞர் கூறிய போது, கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கக் கோரிய அரசு தலைமை வழக்கறிஞர், அதுவரை கோவில் நிதியை பயன்படுத்தப் போவதில்லை என உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...