செலவு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என சிப்காட் நிறுவன இயக்குனர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செலவு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என சிப்காட் நிறுவன இயக்குனர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு நிறுவனமான சிப்காட் நிறுவனம் செலவு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யவில்லை என அதற்கு எதிராகவும், அதன் இயக்குனர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் விக்ரம் கபூர், அம்பூஜ் சர்மா, கந்தசாமி சண்முகம், மங்கத் ராம் சர்மா, முகமது நசீமுதின், ராமச்சந்திரன் தனல்பதி கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணியன் மெய்யப்பன், கோவிந்தசாமி ரவிக்குமார், மீனாட்சி சுந்தரம் கிருஷ்ணன் மாலதி ஆகியோருக்கு எதிராகவும் நிறுவனங்களின் பதிவாளர் தரப்பில் சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதர குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 9 அதிகாரிகளும், சிப்காட் நிறுவனமும் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மனுவில், 2014-15, 2015-16, 2016-17ஆம் நிதியாண்டுகளில் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதற்கான கட்டணமும் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டிலேயே அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துவிட்ட நிலையில், கால வரம்பை தாண்டி 2018ஆம் ஆண்டு தங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், அபராதம் மட்டுமே விதிக்க விதிகள் உள்ள நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். நிர்மல்குமார், ஏற்கனவே கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 6 மாத கால அவகாசத்தை தாண்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், மத்திய கம்பெனி விவகாரத்துறை அறிவுறுத்தலின்படி தனிப்பட்ட முறையில் இயக்குனர்கள் அல்லது அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமம் என கூறி எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...