தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ. 487 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அகமது புகாரி உள்ளிட்ட ஆறு பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ. 487 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அகமது புகாரி உள்ளிட்ட ஆறு பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ. ஆர். புகாரி மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 487 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இதற்காக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான தேசிய அனல்மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும், விசாரணை நடத்தி 564 கோடி ரூபாய் மதிப்பிலான போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சம்பாதித்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக மோசடி செய்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பரிமாற்றம் செய்து, அதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 557 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்பாக அகமது புகாரி உள்ளிட்ட ஆறு பேர் மீது அமலாக்கத்துறை 80 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்த இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

You may also like...