திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக சட்டவிரோதமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக சட்டவிரோதமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரியும், தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மரக்காணம் ஒன்றிய குழு தலைவர்,துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 22 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ஜூனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

அவர் தன் மனுவில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தானும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் ஆதரவு பெற்ற தயாளன் என்பவரும் போட்டியிட்ட நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் படி தான் 14 ஓட்டுகளும்,தயாளன் 12 ஓட்டுகளும் பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்

14 வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டிய நிலையில், தேர்தல் அலுவலருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த தயாளன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்

இது ஒருபுறம் இருக்க, மரக்காணம் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கு தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனு வாங்கும் நடைமுறையை கூட பின்பற்றாமல், நேரடியாக பழனி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்

மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாகமும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலை பற்றி தேர்தல் முடிந்த மறுநாள் (23.11.21) வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம் அலைபேசியில் கேட்ட போது, தனது 35 ஆண்டு கால அரசு பணியில் இது போன்ற நிர்பந்தத்திற்கு உள்ளானதில்லை,தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லையென அவர் மனக்குமுறலை வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார்

வெற்றிபெற்றதாக சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி ஏற்கவும் பணி செய்யவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ள அவர், தேர்தலின் போது பதிவான சிசிடிவி மற்றும் வீடியோ பதிவுகளை அழிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை உயர் நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

தயாளன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவித்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தன்னை அறிவிக்க வேண்டுமெனவும், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME