நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம்’ருத்ரன்’. இந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில்
சென்னை, ஏப்.13-
நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம்’ருத்ரன்’. இந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அதில், ‘ருத்ரன்’ திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரூ.10 கோடி முன்பணம் கொடுத்து பெற்றுள்ளோம். ஆனால், அந்த ஒப்பந்தத்தை, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார கிரியேஷன்ஸ் ரத்து செய்து விட்டது. இந்தநிலையில், இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். இந்த தடையை நீக்க கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் நேற்று முறையிட்டார்.
‘‘ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடப்படும் என்று விளம்பரம் செய்து, 700 தியேட்டர்கள் ‘புக்’ செய்யப்பட்டுள்ளது. எங்கள் தரப்பின் கருத்தை கேட்காமல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவிட்டார்.
………….