நிர்பயா குற்றவாளிகளுக்கு நிறைவேறியது தூக்கு: வழக்கறிஞர் கே.சுமதி – ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு மாறுபட்ட கருத்து


நிர்பயா குற்றவாளிகளுக்கு நிறைவேறியது தூக்கு: வழக்கறிஞர் கே.சுமதி – ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு மாறுபட்ட கருத்து
By செய்திப்பிரிவு

Published: 21 Mar, 20 07:29 am
Modified: 21 Mar, 20 07:29 am




 
 
 


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை உறுதி என்ற பயம் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் கே.சுமதி.
அதேசமயத்தில், காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு காட்டுமிராண்டித்தனமான தண்டனை தீர்வாகாது என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு.
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக் ஷய் குமார் ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் கே.சுமதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
கடந்த 7 ஆண்டுகளாக ஒரு தாய் நடத்திய சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இதனைப் பார்க்கிறேன். மானம் உள்ள பெண்கள் ஆறுதல் அடைய வேண்டிய தருணம் இது. உண்மையாகவே ஒரு விவகாரத்தில் மனித உரிமை மீறல் இருந்தால் அதற்காக குரல் கொடுப்பது நியாயம். ஆனால், கொடூரமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் அதற்கும் குரல் கொடுப்போம் என்றால் அது எந்த வகையில் நியாயம்?
அப்படியென்றால், உயிரிழந்த நிர்பயாவுக்கு மனித உரிமை இல்லையா?. நிர்பயாவின் அம்மாவுக்கு மனித உரிமை இல்லையா?. என்னைப் பொருத்தமட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை உறுதி என்ற பயம் கட்டாயம் இருக்க வேண்டும்.
இதன்மூலம் குற்றம் குறைகிறதோ இல்லையோ, தப்பு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். மரண தண்டனை இருக்க வேண்டும். இன்னொருவருடைய வாழ்க்கையை அநியாயமாக பறித்துவிட்டு நாங்கள் மட்டும் வாழ வேண்டும் என நினைத்தால் அவர்கள் வாழத் தகுதியவற்றவர்கள்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை, ஒரு காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு காட்டுமிராண்டித்தனமான தண்டனை விதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றமே பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது. கடுமையான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடுவதில்லை.
மரண தண்டனை என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒவ்வாத செயல். இதன்மூலம் இனிமேல் இன்னும் ஒரு நிர்பயா சம்பவம் நடக்காது என நம்ப முடியாது. ஒன்று, குற்றம் செய்பவர்களை சீர்த்திருத்த முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பெருகாமல் இருக்க உளவியல் ரீதியான புரிந்துணர்வுகளை பள்ளிப் பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.
ஆண் – பெண் என்ற பாலுணர்வு தொடர்பான புரிதல் சமூகத்தில் இல்லை. அதுகுறித்து யாரும் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. இதனால்தான் தவறான எண்ணம் ஏற்படுகிறது. பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது என்ற குற்றம், அடுத்தடுத்த குற்றங்களுக்கும் காரணமாகி விடுகிறது.
இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்லக்கூடாது எனக் கூறுவது தவறு. அதற்குப் பதிலாக, அந்த மாதிரியான இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசுதான் உறுதி செய்ய வேண்டும்.
சட்டத்தின் ஆட்சிப்படி, மரண தண்டனை என்பது இதுபோன்ற குற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது. தொடர் குற்றங்கள் புரிவோரை திருத்த முடியாது. ஆனால், முதன்முறையாக குற்றம் புரியும் இதுபோன்ற மரண தண்டனை குற்றவாளிகளை திருத்துவது எளிது.
நம்முடைய தண்டனைச் சட்டமும் சீர்திருத்தம் பற்றித்தான் கூறுகிறதே தவிர, பழிக்குப்பழி வாங்க வேண்டும் எனக் கூறவில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு அறிவுப்பூர்வமாக மட்டுமே தீர்வு காண வேண்டும். உணர்ச்சிப்பூர்வமாக தீர்வு காணக்கூடாது. இவ்வாறு நீதிபதி கே.சந்துரு கூறினார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME