நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கையை குறைத்ததை எதிர்த்தும், பட்டப்படிப்பு காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரித்ததை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு செமஸ்டர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது, இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மொழி பயிற்றுவிக்கும் நேரமும், வாரத்திற்கு நான்கு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை, நான்கு ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நான்கு செமஸ்டர்கள் மொழி பாடம் நடத்தப்படும் நிலையில், புதுச்சேரியில் இரு செமஸ்டர்கள் மட்டும் தமிழ் மொழி பாடம் நடத்தப்படுவது மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது. அதனால், 2023 – 24 ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு பழைய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

You may also like...