நீதிபதி RMT.டீக்காராமன், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை புலன்விசாரணை மூலமே தெரியவரும்
பழைய இரும்பை திருடியதாக பதிவான வழக்கில் பாஜக கவுன்சிலர் உட்பட இருவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிலியூரில் உள்ள பழைய மார்க்கெட்டை இடிக்கும் பணிகளை மேற்கொண்ட ராம்குமார் என்பவர், அதில் கிடைத்த பழைய இரும்பு மற்றும் மரம் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அந்த பழைய இரும்பு மற்றும் மரங்களை பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் சக்திவேல் என்பவர், விஜயசத்தியா என்பவருடன் சேர்ந்த, எடுத்துச்சென்று விட்டதாக, திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் ராம்குமார் புகார் அளித்தார்.
இதுகுறித்து பதிவான வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக கவுன்சிலர் சக்திவேல், விஜயசத்தியா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மார்க்கெட்டை இடிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள வைத்தியலிங்கத்தின் அனுமதியுடன் பழைய பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், தங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. வியாபாரிகள் சங்கம் கடிதம் கொடுத்துள்ளதாக கூறி அந்த ஆவணமும் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, பாஜக கவுன்சிலர் சக்திவேல் மீது ஏற்கனவே 2 வழக்குகளும், அவருக்கு உதவிய விஜயசத்தியா மீது 3 சூதாட்ட வழக்குகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி RMT.டீக்காராமன், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை புலன்விசாரணை மூலமே தெரியவரும், என கூறி, இருவரும், செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.