பெயரை தவறாக பயன்படுத்திய இயக்குனர் கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க நடிகர் ரஜினிகாந்திற்கு உத்தரவிடக் கோரி சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெயரை தவறாக பயன்படுத்திய இயக்குனர் கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க நடிகர் ரஜினிகாந்திற்கு உத்தரவிடக் கோரி சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்திருந்த வழக்கில், இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா பட தயாரிப்பு பணிகளுக்காக 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும்,
இந்த தொகையை தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தியான நடிகர் ரஜினிகாந்த் கொடுப்பார் என கடிதம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

செக் மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கும், தனக்கும் தொடர்பில்லை என ரஜினி தெரிவித்துள்ளதால், அவரது பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரிராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்திற்கு உத்தரவிட வேண்டும் என
மனுவில் கோரியிருந்தார்

இந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், முகுந்த் சந்த் போத்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்த முகுந்த்சந்த் போத்ரா, மறைந்து விட்டதால், வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, இயக்குனர் கஸ்தூரிராஜா தரப்பில் வழக்கறிஞர் எஸ். ஹாஜா மொய்தீன் கிஸ்தி, நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் டி. ரவிச்சந்தர் ஆகியோர் ஆஜரானார்கள்.

இயக்குநர் கஸ்தூரிராஜா தரப்பில் வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி ஆஜராகி,10 லட்ச ரூபாய் மட்டுமே போத்ராவிடம் கடன் பெற்றதாகவும், அந்த தொகையை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், தான் கையெழுத்திட்ட வெற்று காகிதத்தில் பணத்தை தராவிட்டால் ரஜினி தருவார் என போத்ராவே எழுதிக் கொண்டதாக
காவல்துறை விசாரணையிலும், கீழமை நீதிமன்ற விசாரணையிலும் போத்ராவே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் வாதிட்டார்.

அதன்பின்னர் இந்த வழக்கு கடந்த 2021ம் ஆண்டு ஜூன், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதங்களில் விசாரணைக்கு வந்தபோது ககன் போத்ரா ஆஜராகவில்லை.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ககன் போத்ரா ஆஜராகவில்லை.

இதையடுத்து, விசாரணையின்போது தொடர்ந்து ஆஜராகாததன் மூலம், வழக்கை நடத்த மனுதாரருக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகிறது எனக் கூறி, ககன் போத்ரா மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...