மாநகராட்சி ஆணையரை 15 நாட்கள் சிவில் சிறை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து.* *சேலம் மா நகராட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா*

*மாநகராட்சி ஆணையரை 15 நாட்கள் சிவில் சிறை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து.*
*சேலம் மா நகராட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா*

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கிராமம், வார்டு 3, டிவிஷன் ‘கே’, டி.எஸ். நெ. 151-1க்கு உட்பட்ட தனக்கு பாத்தியப்பட்ட 765 சதுரடி நிலத்தில் தனது வீடு இருந்ததாகவும், அந்த வீட்டை இடித்துவிட்டு சேலம் மாநகராட்சி பொது ரோடு அமைத்து விட்டதாகவும் அவருடைய வீட்டை மீண்டும் கட்டித்தர கோரி சேலம் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக சேலம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் செயலுறுத்துக்கட்டளை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அவ்வழக்கு 14.06.2001-ந் தேதி அன்று ஒருதலைபட்ச தீர்ப்பானது. மேற்படி ஒருதலைபட்ச தீர்ப்பாணையை நிறைவேற்றாததால் வாதி மல்லிகா மாநகராட்சி அணையருக்கு எதிராக கோர்ட் தீர்ப்பினை அவமதித்ததற்காக தாக்கல் செய்த மனுவில் மாநகராட்சி ஆணையரை 15 நாட்கள் சிவில் சிறைக்கு அனுப்ப உத்திரவிட்டு தீர்ப்பளித்தது.

அதன் பின்னிட்டு மாநகராட்சி சார்பில் ஒருதலைபட்ச தீர்ப்பினை ரத்து செய்ய ஏற்பட்ட காலதாமதத்தினை மன்னிக்கக் கோரி மனு தாக்கால் செய்யப்பட்டு அம்மனுவும் கீழமை நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்படி இரண்டு உத்திரவுகளுக்கு எதிராக சேலம் மாநகராட்சியால் இரண்டு சீராய்வு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மேற்படி மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சேலம் மாநகராட்சி நிலைவழக்கறிஞர் திருமதி என். தேவி அவர்களுக்காக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் ஆஜராகி, வழக்கில் குறிப்பிடப்பட்ட சொத்தானது அரசுப் பொதுப்பாதை என்றும் அது எதிர்மனுதாரருக்குச் சொந்தமானது அல்ல என்றும் அதனால் மேற்படி ஒருதலைப்பட்ச தீர்ப்பானது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும், அரசுப் பொதுப்பாதையை ஆக்கிரமித்து அதை மறைத்து தவறான தகவல்களை வாதி கீழமை நீதிமன்றத்தில் அளித்து தவறாக ஒருதலைப்பட்ச தீர்ப்பு பெற்றுவிட்டார் என்றும், அத்தீர்ப்பை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோளிட்டு வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாண்புமிகு நீதியரசர் அவர்கள் சேலம் மாநகராட்சி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்களின் வாதத்தினை ஏற்று மாநகராட்சியால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு சீராய்வு மனுக்களையும் அனுமதித்து ஆணையருக்கு எதிராக பிறப்பிக்கப்ட்ட சிவில் அரஸ்ட் உத்தரவை ரத்து செய்ததுடன், மாநகராட்சிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தால் 22 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ஒருதலைபட்ச தீர்ப்பினை ரத்து செய்தும், மேற்படி உரிமையியல் வழக்கினை ஆறு மாதத்திற்குள் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டும் 03.03.2023 அன்று தீர்ப்பளித்தார்.

You may also like...