மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்ய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று கூறிய கபில் சிபல், பல மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா ஒன்றிய அரசு என அழைப்பதே சரி எனக் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவன் மகன் ராகேஷ் நினைவாக, நீதி மற்றும் சமத்துவத்திற்கான அறக்கட்டளை துவக்கம் மற்றும் அவரின் திருஉருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், ப.சிதம்பரம், இந்து என்.ராம், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கபில் சிபல், பாராளுமன்றத்தில் உங்களுடைய கருத்தை நீங்கள் சுதந்திரமாக கூற முடியாது , மசோதாவிற்கு எந்த மாதிரியான வாக்கை அளிக்க வேண்டும் என ஆளுகின்ற அரசு முடிவு செய்கிறது என்றார். அரசியல் சட்டங்கள் அங்கு செல்லுபடியாகாது என்றார். மெஜாரிட்டி அரசு, மெஜாரிட்டி என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான சட்டங்களை பாராளுமன்றத்தில் எளிதாக சட்டமாக்கி வருகின்றனர். கார்பரேட் நிறுவனங்கள் தான் கட்சிகளுக்கு நிதியை வழங்குகிறது. கட்சிகளிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும் ? நாட்டில் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரராக மாறுகின்றனர்.

 

இந்திய அரசியலமைப்பு சட்டங்களும் பணக்காரர்களுக்கு உதவும் வகையில் தான் உள்ளது. மாநிலங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் முன்வைத்து இயற்றக்கூடிய சட்ட முன்வடிவை அனுமதிக்க வேண்டும். அதில் அரசியல் காரணங்களுக்காக தடுக்க கூடாது.அதே போல் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறக்கூடிய வகையில் எந்த சட்டமும் இருக்க கூடாது, அதனை நீதிமன்றமும் ஏற்காது .
நாட்டில் ஜனநாயகம் மீறப்படுவதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நிதி அமைச்சரிடம் கூட ஆலோசிக்க வில்லை. நடைபெறும் தேர்தல்களில் ஏதேனும் ஒரு கட்சி வெற்றிப்பெற்றதாக அறிவிப்பதே ஐனநாயகம் என கருத்தப்படுகிறது.நாட்டில் 24% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது . இந்த சூழலில் தான் டிஜிட்டல் இந்தியா குறித்து பேசுகின்றனர். நாட்டில் சமூக அநீதி , அரசியல் அநீதி , பொருளாதார அநீதிகள் மட்டுமே நிகழ்கின்றது என தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த கபில் சிபல், கல்வி மத்திய பட்டியலில் இருக்கிறது. அதனால் தான் நீட் போன்ற தேர்வுகள் இருக்கிறது என்றும், கல்வி, சுகாதாரம் மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.மேலும் ஆளுநர் குறைந்த அதிகாரம் கொண்டுள்ளதாகவும், அவருக்கான அதிகாரத்தை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அதேபோல் மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்ய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று கூறிய கபில் சிபல், பல மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா ஒன்றிய அரசு என அழைப்பதே சரி எனக் கூறினார்.

You may also like...