வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 -96ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக பதவி வகித்த இந்திர குமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், வெங்கடகிருஷ்ணன். இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து, 2012ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

சாதாரண பின்னணியைக்ன்கொண்ட வெங்கடகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் வெளிநாட்டு கரன்சிகள், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், அவரது மனைவி மஞ்சுளாவுக்கு என தனிப்பட்ட எந்த வருவாய் ஆதாரம் இல்லாததையும் கருத்தில் கொள்ளாமல் இருவரையும் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

சொத்துக்களுக்கு உரிய விளக்கங்களை அளித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என வெங்கடகிருஷ்ணன், மஞ்சுளா தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஆவணங்களை ஆராய்ந்ததில், வெங்கடகிருஷ்ணனும், மஞ்சுளாவும் வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், தண்டனை விவரம் குறித்து விளக்கமளிப்பதற்காக நாளை (செப்டம்பர் 19ம் தேதி) வெங்கடகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளாவை ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...