வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டி விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டி விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

புகார் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் தன்னையோ, தனது குடும்பத்தினரையோ துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி சென்னை சோழவரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறையினருக்கு அளவில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரத்தை குற்ற விசாரணை முறைச்சட்ட கட்டமைப்புக்குள் பயன்படுத்த வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, காவல் துறையினரின் விசாரணைகளின் பாதுகாவலராக மாஜிஸ்திரேட் இருந்தாலும், புலன் விசாரணையில் தலையிட அவருக்கு அதிகாரமில்லை என்பதால், விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்துவதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கல் தாக்கல் செய்யப்படுவதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றமும், வழக்கமாக புலன் விசாரணைகளில் தலையிடாது என்ற போதும், துன்புறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தால் கண்மூடி இருக்காது எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டி விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், புகார் தொடர்பான விசாரணைக்கு ஒருவரை அழைக்கும் போது, புகார் அளித்தவரின் பெயர், புகார் பெற்றதற்கான சான்று எண், எந்த தேதியில், எத்தனை மணிக்கு ஆஜராக வேண்டும் என எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு சம்மன் அனுப்ப வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, விசாரணை விவரங்களை காவல் நிலையத்தில் உள்ள பதிவேட்டில் குறிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு ஆஜராவோரை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...