அண்ணன் என்று கூறி ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்று சென்னை ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மார்ச்.

அண்ணன் என்று கூறி ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்று சென்னை ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு மனைவிகள்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு பிறப்பித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீதம் பங்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

என் தந்தை ஆர்.ஜெயராமுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜெ.ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். 2-வது மனைவி வேதவல்லி என்ற வேதம்மாவுக்கு, ஜெயக்குமார், ஜெயலலிதா என்று இருவர் பிறந்தனர்.

ஜெயலலிதாவின் வாரிசு

இந்த வகையில் ஜெயக்குமாரும் , ஜெயலலிதாவும் என்னுடைய சகோதர, சகோதரி ஆவர். 1950-ம் ஆண்டில், என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் கோட்டில் என் அம்மா தொடர்ந்த வழக்கில், வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டதால், அண்ணன் என்ற முறையில் நான் தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.

எனவே, ஜெயலலிதாவின் மொத்த சொத்துக்களில் 50 சதவீத பங்கை எனக்கு தர தீபா , தீபக் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

விசாரணைக்கு ஏற்பு

இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு மாற்றியது. இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி ஜெ.தீபா, ஜெ,தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் கோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்தநிலையில், இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார். ஆனால், எதிர்மனுதாரரகள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வாசுதேவன் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

………………

You may also like...