அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள வெளியிடப்பட்ட டெண்டரில் மறு உத்தரவு வரும்வரை இறுதி முடிவு ஏதும் எடுக்கக்கூடாது என மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள வெளியிடப்பட்ட டெண்டரில் மறு உத்தரவு வரும்வரை இறுதி முடிவு ஏதும் எடுக்கக்கூடாது என மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள மேலச்சேரி கிராமத்தை சேர்ந்த தனம் சேகர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள பணிகளுக்கான டெண்டரை நவம்பர் 8அம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர் வெளியிட்டதாகவும், அதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அரசிடம் பதிவுபெற்ற ஒப்பந்ததாரர் என்ற முறையில் சதானந்தல், கொக்கனந்தல் கிராமங்களில் உள்ள பணிகளுக்காக ஆன்லைன் மூலம் டிசம்பர் 14ஆம் தேதி டெண்டரில் விண்ணப்பித்துவிட்டு, டிசம்பர் 15ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் படிவங்களை சமர்ப்பிக்க சென்றபோது, நவம்பர் 15ஆம் தேதியே டெண்டருக்கான தேதி முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அடியாட்கள் மூலம் தான் மிரட்டப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

டெண்டருகான இறுதி தேதியை மாற்றி, மக்கள் பணத்தில் மோசடி செய்யும் வகையில் வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும், வழக்கு முடியும் வரை டெண்டருக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதன்பின்னர் நீதிபதி, தவறுகளுடன் வெளியிடப்பட்டுள்ளதால் டெண்டர் மீது மறு உத்தரவு வரும்வரை இறுதி முடிவு ஏதும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...