அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்ட பொருட்களை Case dismissed சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் முகமது ரியாஸ், வைத்திலிங்கம் சார்பில் வக்கீல் ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்

சென்னை, ஏப்.1-

அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை கேட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கலவரம்

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி வானகரம் திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை அ.தி.மு.க., அலுவலகம் சென்றபோது, இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது.

அப்போது, அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணங்கள், வாகனங்களில் ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்பட பல பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த கலவரம் தொடர்பான வழக்குகளை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒப்படைப்பு

அப்போது, அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்ட பொருட்களை போலீசாரிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒப்படைத்தனர். அந்த பொருட்களை எல்லாம் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த பொருட்களை எல்லாம் கேட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சாவி ஒப்படைப்பு

அதில், ஜூலை 11-ந்தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து அ.தி.மு.க., அலுவலகத்தை அதிகாரிக்ள் சீல் வைத்து சாவியை எடுத்துச் சென்று விட்டனர். அதை கேட்டு தொடர்ப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. எனவே, இந்த பொருட்களை எல்லாம் எங்களிடம் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்தியலிங்கம் மனு தாக்கல் செய்தார். அதில், பொருட்கள் எல்லாம் இந்த கோட்டு கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். அவர்களிடம் ஒப்படைத்தால், எங்கள் தரப்புக்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார். இந்த 2 மனுக்களும் நீதிபதி மோகனாம்பாள் முன்பு விசாரணைக்கு வந்தது.

தள்ளுபடி

அப்போது, சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் முகமது ரியாஸ், வைத்திலிங்கம் சார்பில் வக்கீல் ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக பிரதான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இடைக்கால மனுக்கள் மீதுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிரதான வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த பொருட்களுக்கு எல்லாம் யார் உரிமையாளர் என்று தற்போது முடிவு செய்ய முடியாது. அதனால், இருவரது மனுக்களும் நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...