ஆட்டோ, டாக்சி பயணிகளிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் விதிகளை பின்பற்ற கோரி ஜாகிர் உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.  அதில், மீட்டர் வைக்காத ஆட்டோக்களுக்கு தகுதி சான்று வழங்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆட்டோ, டாக்சி பயணிகளிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆட்டோ, டாக்சியில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாக பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரையில் கட்டண மீட்டர் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகள் போலவும், மினி பேருந்துகள், பேருந்துகளை போலவும் இயக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.  ஆட்டோ மற்றும் கார்களில் அதிக ஆட்களை ஏற்றுவதை கடுமையானதாக கருதி அதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு பதில் அளிக்க கோரி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
ஆட்டோ, டாக்சியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று ஆர்.டி.ஓ.க்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.

You may also like...