இந்த கருத்தரங்கிற்கு குறைவான வக்கீல்களே வந்திருந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘எதற்காக இந்த கருத்தரங்கத்தை சென்னையில் நடத்துகிறோம்?. இந்த தீர்ப்பாயத்தின் விவரம் மற்றும் புதிய சட்டங்களை வக்கீல்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மக்களுக்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என்பதற்காகத்தான். வாய்ப்புகள் கிடைக்கும்போது தவற விடக்கூடாது’’ என்று வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கினார்.

டெல்லியில் உள்ள தொலைதொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சார்பில் சென்னையில் ‘தொலைதொடர்பு, ஒலிபரப்பு மற்றும் சைபர் பிரிவுகளின் பிரச்சினை மற்றும் தீர்வுகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது.

இதில் தலைமை விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கவுரவ விருந்தினராக ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க., எம்.பி.யும், மூத்த வக்கீலுமான பி.வில்சன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.சங்கர்நாராயணன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரையும் தீர்ப்பாயத்தின் தலைவர் டி.என்.பட்டேல் வரவேற்றார். தொலைதொடர்பு தீர்ப்பாய வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் மன்ஜூல் பாஜ்பாய் நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சில் பேசிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘இப்போதெல்லாம் மக்கள் தகவல் தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, தொலைதொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஏதோ பெருநிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மட்டும் உள்ளதுபோல நினைக்கக் கூடாது. இந்த தீர்ப்பாயம் சாமானிய மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தொலைதொடர்பு, கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள், ஆதார், விமான கட்டணம் என்று பல தரப்பட்ட வழக்குகளை தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்’’ என்று கூறினார்.

மேலும், இந்த கருத்தரங்கிற்கு குறைவான வக்கீல்களே வந்திருந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘எதற்காக இந்த கருத்தரங்கத்தை சென்னையில் நடத்துகிறோம்?. இந்த தீர்ப்பாயத்தின் விவரம் மற்றும் புதிய சட்டங்களை வக்கீல்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மக்களுக்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என்பதற்காகத்தான். வாய்ப்புகள் கிடைக்கும்போது தவற விடக்கூடாது’’ என்று வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கினார்.

முன்னதாக ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசும்போது, ‘‘சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டை விட, தொலைதொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு அதிக அதிகாரம் உள்ளது. பண்டிகை காலங்களிலும், அவசரத்துக்காகவும் ஊருக்கு செல்லும் நேரத்தில் விமான டிக்கெட் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து திருச்சிக்கு 18 ஆயிரம் ரூபாய், சென்னையில் இருந்து டெல்லிக்கு 60 ஆயிரம் ரூபாய் என்று இஷ்டம்போல வசூலிக்கின்றனர். இதுதொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம்.

கேபிள் டி.வி., கட்டணம், ஆதார், தகவல் தொழில் தொடர்பான வழக்குகளையும் தொடரலாம். அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளை விவாதம் என்ற பெயரில் ஊடகங்கள் விசாரணை நடத்தி தீர்ப்புகளையும் வழங்கி விடுகின்றன. இதனால், அந்த வழக்கை விசாரிக்கும்போது, வக்கீல்களுக்கு மட்டுமல்ல நீதிபதிகளுக்கும் பிரச்சினை வருகிறது. எனவே, இதுபோன்ற பிரச்சினைக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம்’’ என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.பி., பி.வில்சன், ‘‘கொரோனா ஊரடங்கு காலத்தில் உறவினர்களின் திருமணத்துக்கு செல்ல முடியாமல் பலர் செல்போன் வீடியோவில் வீட்டில் இருந்தபடி பார்த்தனர். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, தொலைதொடர்பு, கேபிள் ஆப்ரேட்டர், ஆதார் உள்ளிட்டவைகளில் ஏற்படும் பிரச்சினைக்கு இந்த தீர்ப்பாயத்தை பொதுமக்கள் அணுக வேண்டும். ஆனால், டெல்லியில் உள்ள இந்த தீர்ப்பாயத்தை இங்குள்ள மக்கள் அணுகுவது கடினம். எனவே, இந்த தீர்ப்பாயத்தின் கிளையை சென்னையில் தொடங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை மனுவை தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் நான் கொடுத்தேன். அவரும் சென்னையில் தீர்ப்பாயத்தின் கிளை அமைப்பதாக உறுதி அளித்துள்ளார். தற்போது, தீர்ப்பாயத்தின் தற்காலிக அமர்வு சென்னையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) வழக்குகளை விசாரித்துள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கிளை சென்னையில் அமையும்பட்சத்தில், பிராட்வே பஸ்நிலையம் அருகே கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இடம் வழங்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

……………….

You may also like...