SEKAR REPORTER

சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டுமென, கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாயத்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும்,
2008ம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், 2023ம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிமீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு மூத்த வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பதிலளித்தார்.

இதையடுத்து, எஸ்டேட்டை ஆய்வு செய்யவும், சோதைன செய்யவும் அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளதாகக் கூறி, உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆய்வு செய்யலாம் என அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டுமெனவும், அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version