SEKAR REPORTER

சட்டவிரோத வழக்கு என எப்படி கூறமுடியும் என கேசவ விநாயகம் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பதியப்பட்ட வழக்கை எப்படி சட்டவிரோத வழக்கு என கூறமுடியும் என தமிழக பா.ஜ. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.

சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில், எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், சட்டவிரோதமாக பதியப்பட்ட வழக்கை புலன் விசாரணை செய்ய முடியாது என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

சட்டவிரோத வழக்கு என எப்படி கூறமுடியும் என கேசவ விநாயகம் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகும்படி தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த கேசவ வினாயகம் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் தொடர்பான இந்த வழக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நடைமுறையை பின்பற்றினால் பணம் சென்று விடும் என நீதிபதி குறிப்பிட்டார்.

தொடர்ந்து
சிபிசிஐடி சார்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 6ம் தேதி தள்ளி வைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version