சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் நாகூர் தர்கா அறங்காவலர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது.


சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் நடத்திய
பேச்சுவார்த்தையில் நாகூர் தர்கா அறங்காவலர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது.
இதற்கு பாராட்டு தெரிவித்த ஐகோர்ட்டு நீதிபதி, அனைத்து வழக்குகளையும்
முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதிகள் சமரச குழு
நாகை மாவட்ட நாகூர் தர்கா 180 ஆண்டுகள் பழமையானது. அனைத்து மதத்தினரும்
இங்கு வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இந்த தர்காவில் 8 பேர்
அறங்காவலர்களாக இருந்து நிர்வகித்து வருகின்றனர். இவர்களது நியமனம்
மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும். இந்த நிலையில் 8-வது
அறங்காவலராக இருந்த வாஞ்சூர் பக்கிர் இறந்து விட்ட காரணத்தினால் அவருக்கு
பதிலாக கமீல் சாஹிப் என்பவர் தன்னை அறங்காவலராக நியமிக்க உரிமை கோரினார்.
இந்த பிரச்னை தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், சென்னை
ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை
விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சுப்ரீம் கோர்ட்டு  ஓய்வு பெற்ற
நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள்
கே.என்.பாஷா, அக்பர் அலி ஆகியோர் அடங்கிய சமரச குழுவை அமைத்து,
இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சமரசம் செய்ய
உத்தரவிட்டார்.
பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்
இதையடுத்து இந்த நீதிபதிகள் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை
நடத்தினர். இதில், 8-வது அறங்காவலராக செய்யது கமீல் சாஹிப்பை நியமனம்
செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி
டி.எஸ்.சிவஞானம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
நீதிபதிகள் சமரச குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதுதரப்புகளுக்கு ஆஜரான வக்கீல்கள் காஜா மொய்தீன் ஹிஸ்தி, ஸ்ரீநாத்
ஸ்ரீதேவன் ஆகியோர், தங்கள் கட்சிக்காரர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு
விட்டதாக கூறினர்.
இதையடுத்து நீதிபதி, ‘சமரசம் செய்த நீதிபதிகள் குழுவுக்கும், இரு தரப்பு
வக்கீல்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். பின்னர், ‘நாகூர் தர்கா
தொடர்பாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை எல்லாம் முடிவுக்கு
கொண்டு வர இருதரப்பினரம் சம்மதம் தெரிவித்ததால், அனைத்து வழக்குகளையும்
முடித்து வைத்த நீதிபதி, தற்போது சமரசம் ஏற்பட்டு விட்டதால், இதுவரை
தர்கா நிர்வாக பொறுப்பை கவனிக்க வரும் குழு, அனைத்து பொறுப்புகளையும்
இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’என்று உத்தரவிட்டார்.
சந்தனக்கூடு திருவிழா
மேலும், ‘சமசரம் செய்த 3 நீதிபதிகளின் அறிவுரைகளை, தர்கா அறங்காவலர்கள்
அனைவரும் தீவிரமாக பின்பற்றி, இந்த பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கும்
எடுத்துச் செல்லாமல் இருக்க வேண்டும்.  ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்
புகழ்ப்பெற்ற சந்தனக்கூடு திருவிழாவின் போது, போலீஸ் பாதுகாப்பு
வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஏதாவது ஒரு
காரணத்துக்காக ஐகோர்ட்டில் அறங்காவலர்கள் வழக்கு தொடர்வார்கள். தற்போது
அறங்காவலர்களுக்கு இடையே ஒற்றுமையும், சமரசமும் ஏற்பட்டு விட்டதால்,
வருகிற ஜனவரி மாதம் 26-ந்தேதி நடைபெற உள்ள ‘சந்தனக்கூடு’ திருவிழாவை
அனைவரும் ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன், அவரவர் பங்களிப்புடன் வெகு
சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றும் நீதிபதி
கூறியுள்ளார்.
…………………………………

You may also like...