தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத் திறனாளிகள் வசதியாக கொள்முதல் செய்யப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சட்டப்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற போதும், நிதி நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வங்கிகளிடம் உதவி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது எனவும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகளுடனான பேருந்துகளின் விலை குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...