தமிழ்நாட்டில் சிறப்பான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு

தமிழ்நாட்டில் சிறப்பான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு

சென்னை, மார்ச்.18&
தமிழ்நாட்டில் சிறப்பான, அற்புதமான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை காட்டும் நூலாக சிலப்பதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரணியம் பேசினார்.
*சுழற்கோப்பை*
சென்னை ஐகோர்ட்டில் உள்ள தி மெட்ராஸ் பார் அசோசியேசன், சட்ட கல்லூரி மாணவர்களிடையே மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்தி, வெற்றி பெறும் கல்லூரிகளுக்கு சுழற்கோப்பை வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் அறிமுக விழா சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி, வி.பார்த்திபன், ஆர்.மகாதேவன், எஸ்.வைத்தியநாதன், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்ட நீதிபதிகள், அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*போராட்டக்கதை*
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரையும் தி மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன் வரவேற்று பேசினார். செயலாளர் சீனிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார். போட்டியில் வெற்றிப் பெறுவோருக்கு வழங்கப்பட உள்ள சுழற்கோப்பையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், Ôசிலப்பதிகாரத்தில் சட்டமும் நீதியும்Õ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:&
சிலப்பதிகாரம் என்பது அநீதியை எதிர்க்கும் ஒரு பெண்ணின் போராட்டக் கதையாகும். எல்லோரும் சிலப்பதிகாரம் என்பது ஒரே ஒரு வழக்கு சம்பந்தப்பட்டது என்று நினைக்கின்றனர். ஆனால், 3 வழக்குகள் சம்பந்தப்பட்டது.
*3 வழக்குகள்*
ஒன்று கோவலன் மீது சுமத்தப்படும் திருட்டு வழக்கு. மற்றொன்று பாண்டிய மன்னன் மீது கண்ணகி தொடரும் வழக்கு. மூன்றாவது வழக்கு, மதுரையை அழிக்க வேண்டாம். முற்பிறவியின் ஊழ்வினையின் காரணமாக இது நடந்துள்ளது என்று மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் முறையிடும் வழக்கு.
பண்டைய இலக்கியங்களில் சிலப்பதிகாரத்துக்கு என்று தனி சிறப்பு உள்ளது. 2&ம் நூற்றாண்டிலேயே ஒரு சட்ட நூலாக சிலப்பதிகாரம் இயற்றப்பட்டுள்ளது. சட்ட நூலில் ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் நோக்கங்களும், வரையறைகளும் இருக்கும். அதுபோல சிலப்பதிகாரத்தில் உள்ளது.
*நீதி பரிபாலனம்*
நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, தமிழ்நாட்டில் சிறப்பான, அற்புதமான நீதி பரிபாலனம் இருந்துள்ளது என்பதை காட்டும் நூலாக சிலப்பதிகாரம் உள்ளது. உரிமையியல் சட்டத்தை விட, குற்றவியல் சட்டங்களை தான் அதிகமாக பண்டைய இலக்கியங்களில் பேசப்படுகிறது.இன்றைக்கு நாம் பின்பற்றக்கூடிய சட்ட கூறுகளுக்கான அடிப்படை, நம் பண்டைய இலக்கியங்களில் இருந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
…….படம் உண்டு……….

You may also like...