தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா என்றும் மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், அதிமுக கட்சி 2017ம் ஆண்டு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்தும் வழக்குகள் தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில், இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் எனக் கோரி கடிதம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கக்கோரி பதிவாளருக்கு கடிதம் அளித்துள்ளதாக தெரிவிக்கபட்டது.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கபட்டு வரும் நிலையில் வேறு நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா என்றும், தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா என்றும் மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

அதிமுக தொடர்பான வழக்குகளை செப்டம்பர் 9ம் தேதி தன் முன் விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...