லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குனருக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் மீது விசாரணை நடத்தக் கோரி பெண் ஊழியர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குனருக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் மீது விசாரணை நடத்தக் கோரி பெண் ஊழியர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இயக்குனராக பதவி வகித்த சேவியர் அல்போன்ஸ் என்பவர், சங்க நிதியில் கையாடல் செய்ததாக, சங்கத்தின் செயலாளராக பணியாற்றிய பெண் செயலாளரான மேரி ராஜசேகரன், கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். அதன்பின், சேவியர் அல்போன்ஸ் தனக்கு தொடர் தொல்லை அளித்ததாகவும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் மேரி புகார் அளித்தார்.

தனது புகாரின் அடிப்படையில், பணியிடத்தில் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரியும், திடீர் பணிநீக்கம் செய்யப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மேரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், பாதிக்கப்பட்ட மேரிக்கு 64.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இரு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மேரி, பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார் என கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது ஆதாரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தான் முதல் முறையாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும், நிதி முறைகேடு பற்றி தான் கல்லூரிக்கு புகார் அளித்துள்ளார் எனவும் கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஒப்பந்தப் பணியாளரான அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட போது, 60 வயதை கடந்து விட்டதால், எந்த இழப்பீடும் வழங்க உத்தரவிட முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல, 64.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், ஆணையத்திற்கு பரிந்துரை அளிக்க மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், முறையாக விசாரணை நடத்தாமல் இந்த உத்தரவை ஆணையம் பிறப்பித்துள்ளதாகவும் கூறி, அதை ரத்து செய்தும் தீர்ப்பளித்தார்.

You may also like...