10 ஆயிரம் பேரிடம் 14 கோடி ரியல் எஸ்டேட் மோசடி செய்த புகாரில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை நியமித்து

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அகிலாண்டீஸ்வர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மாதம் 400 வீதம் 50 மாதங்களுக்கு பணம் கட்டினால் செய்யாறு பகுதியில் அரை கிரவுண்ட் நிலம் கிடைக்கும் என்றும் மாதம் 300 வீதம் 50 மாதங்களுக்கு பணம் கட்டினால் திருச்சியில் அரை கிரவுண்ட் நிலம் கிடைக்கும் என்றும் திருச்சியை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் கடந்த 2007ல் அறிவித்தனர்.
இதையடுத்து, அந்த திட்டத்தில் ஏராளமானோர் பணம் கட்டனர். ஆனால், அவர்களுக்கு நிலத்தை கிரயம் செய்து தராமல் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஏமாற்றி
சுமார் 10 ஆயிரம் பேரிடம் சுமார் 14 கோடியை பணத்தை வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக காஞ்சிபுரம் சர்வதீர்த்த மேல்கரையை சேர்ந்த ஆர்.வரதராஜன் சிவகாஞ்சி போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், அவரது மகன் சுதாகர், அந்த நிறுவனத்தை சேர்ந்த செல்வராஜ், பிரகாஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சங்கரசுப்பிரமணியனும், சுதாகரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் புகார்தாரர் வரதராஜன் சார்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி
பாதிக்கப்பட்ட 2206 பேர் நீதிமன்றத்தில் நாடி நிவாரணம் கோரியுள்ளதால், நிறுவனத்திற்கு சொந்தமான 21 சொத்துக்களில் 5 தவிர மற்றவற்றின் மதிப்பு சந்தை மதிப்பில் தற்போது 10 கோடியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வருமான வரித்துறை 6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதால், தற்போது இந்த விஷயத்தை தீர்க்க தயாராக உள்ளதாக மனுதாரர்களில் ஒருவரான சுதாகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பிரச்னையை தீர்த்துவைக்க ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை ஆணயராக நியமனம் செய்வதாகவும், அவர் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை, ஆவணங்களை பெற்று பரிசீலித்து நிலம் அல்லது பணத்தை திரும்ப தர உரிய நடவடிக்கைகளை எடுத்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் நிறுவன உரிமையாளரான சுதாகர் நீதிபதி ஆணையத்திற்கு உரிய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like...