500 கோடி நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜி இயக்குனர் அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

500 கோடி நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜி இயக்குனர் அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தரம் குறைந்த நிலக்கரியை, உயர்தர நிலக்கரி என இறக்குமதி செய்து அரசை ஏமாற்றியதாக , கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி, தேசிய அனல்மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின்நிறுவனம் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடி ரூபாய் அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 557 கோடி ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்த வழக்கில் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அகமது ஏ.ஆர். புகாரியை அமலாக்கத்துறையினர் மார்ச் 4 ம் தேதி கைது செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனவும், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அகமது புகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாகவும் அதற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து மனுவை திரும்ப பெற அனுமதி அளித்த நீதிபதி, புகாரியின் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...