Acj நீதிமன்ற வளாகத்திற்குள் தற்கொலை சம்பவம் நடந்ததால் தனது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது

 

உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு விளக்கத்தை ஏற்று, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில், பட்டியலினத்தைச் சேர்ந்த வேல்முருகன் பழங்குடியினர் சான்றிதழ் கோரி செப்டம்பர் 20ம் தேதி அளித்த விண்ணப்பத்தில் செப்டம்பர் 23ம் தேதி கள ஆய்வு செய்து, செப்டம்பர் 26ம் தேதி நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்திற்குள் தற்கொலை சம்பவம் நடந்ததால் தனது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்பதால், தாமாக முன்வந்து வழக்கை எடுத்ததாக தெரிவித்தனர்.
வேல்முருகனும், அவரது தந்தையும் பட்டியல் இன குறவர் என்பதால், அவரது மகனுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

You may also like...