Dmk mp Raja wealth case adj dmk mp nr elango and dmk adv saravanan argued raja not appear in court

திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்களுக்கு எதிராக கடந்த மாதம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக, குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில்,
இந்த வழக்கு நீதிபதி கே.ரவி முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக.எம்.பி.ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகியிருந்தனர்.

நாடாளுமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆ.ராசா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

You may also like...