SEKAR REPORTER

GRSJ -PBBJ bench சரமாரி கேள்வி / காபாலீஸ்வரர் temple case/ for penter NIranjan/gov ag p s raman # சட்டப்படி கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் பெறப்பட்டதா

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கோவில் நிதியில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களின் ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து நாளை விளக்கமளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் 26.78 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்து சமய அறநிலைய துறை சட்ட விதிகளை பின்பற்றாமல், உரிய அதிகாரமில்லாமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 88 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதன் மூலம், ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வாடகை வருவாய் பாதிக்கப்படும் எனவும், கோவில் நிதி 28 கோடி ரூபாயை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதால், ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலாச்சார மையம் அமைக்க விரும்பினால், அதை கோவில் நிலத்தில், நிதியில் அமைக்க முடியாது எனவும், அரசு நிலத்தில், அரசு நிதியில் அமைத்தால் வரவேற்கத்தக்கது எனவும் திட்ட அனுமதி இல்லாமல் கலாச்சார மையம் கட்ட முடியாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கலாச்சார மையம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளதால், அந்த பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும், இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அறநிலைய துறை சட்டப்படி, கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிட்டு, ஆட்சேபங்கள் பெற வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் வாதிட்டார்.

அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக உரிய அனுமதிகளை கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை அணுகியுள்ளதாகவும், உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

மேலும், தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய இந்த மையத்தில் கட்டப்படும் அரங்குகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கோவிலுக்கு வருவாய் வரும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, சட்டப்படி கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து நாளை விளக்கமளிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version