Idol case and encouragement case rti case news

[7/23, 12:13] Sekarreporter1: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து சிவகாஞ்சி போலீசாருக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலையில் சில சேதங்கள இருந்ததால், புதிதாக தங்க சிலை செய்யப்பட்டது.

இதற்காக 100 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்டும், சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் இல்லை என்று அண்ணாமலை என்பவர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரிக்க, சிவகாஞ்சி போலீசாருக்கு காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டது.

அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை அப்போதைய ஆணையர் வீர சண்முகமணி, திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா , சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா ,ஸ்தனிகர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது 2018ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை, கடந்த 2019 ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கூடுதல் ஆணையர் கவிதா , முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததை தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு, வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மீது நம்பிக்கை வைத்து இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதித்த நிலையில், நான்கு ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்கும்படி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை 90 நாட்களில் முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிவகாஞ்சி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுக்களை முடித்து வைத்தார்.
[7/23, 13:46] Sekarreporter1: சென்னை, ஜூலை 24: சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பார்குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவருடன் திருமணம் செய்யாமல் 2 ஆண்டுகளாக சிவா குடும்பம் நடத்தி வந்துள்ளார். சின்னப்பொண்ணுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

இந்த நிலையில் தனது பெண் குழந்தைகளுக்கு வீட்டை எழுதி வைக்குமாறு சின்னப்பொண்ணுவிடம் சிவை கேட்டுள்ளார். அதற்கு சின்னப்பொண்ணு மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2010 செப்டம்பர் 20ம் தேதி சின்னப்பொண்ணுவிடம் வீட்டை தனது மகள்கள் பெயருக்கு எழுதிக்கொடுக்குமாறு சிவா வற்புறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் கிடந்த மரக்கட்டையால் சின்னப்பொண்ணுவின் தலையில் சிவா அடித்துள்ளார். பின்னர் தான் இடுப்பில் மறைத்து வைத்துள்ள கத்தியால் சின்னப்பொண்ணுவின் கழுத்தில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

சம்பவத்தை பார்த்த சிலர் சின்னப்பொண்ணுவை வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்னப்பொண்ணு இறந்துள்ளார்.
இதையடுத்து, சின்னப்பொண்ணுவின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை திருவலம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2018 செப்டம்பர் 11ல் சிவாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சிவா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிவா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.ரவி வாதிடும்போது, கொலை சம்பவத்தை நேரில் பார்த்த 3 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகி மாறியுள்ளனர். மேலும், முக்கிய சாட்சிகளான 5 பேரும் விசாரணை நீதிமன்றத்தில் பிறழ் சாட்சிகளாகினர். தண்டனை வழங்குவதற்கான எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் சம்பவம் நடத்து 16 நாட்கள் கழித்து மாஜிஸ்திரேட் முன்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்டையில் மட்டுமே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் வாதிடும்போது, போலீஸ் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர் என்பதற்காக விடுதலை செய்துவிட முடியாது. மனுதாரர் சிவா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் மருத்துவ சாட்சிகளையும் கவனத்தில் கொண்டே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பான சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியுள்ளன. மருத்துவ அறிக்கையில் சிவாவின் சட்டையில் இருந்த ரத்தமும் சின்னப்பொண்ணுவின் ரத்தமும் ஒன்றுதான் என்று கூறப்பட்டிருந்தாலும் வெறும் ‘பி’ குரூப் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி-பாசிட்டிவா, நெகடிவா என்று தெரிவிக்கப்படவில்லை. ரத்த ஒப்பீடு மட்டுமே குற்றத்தை உறுதி செய்யமுடியாது.

புகார் கொடுத்த உறவினரே பிறழ் சாட்சியாக மாறிவிட்டார். குற்றத்தை நிரூபிக்க போலீஸ் தரப்பில் பொது சாட்சியங்கள் எதுவும் இல்லை. குற்றத்தை நிரூபிக்க போலீசும் உரிய முயற்சியை மேற்கொள்ளவில்லை. சாட்சியங்கள் கூறிய வாக்குமூலத்தை (மாஜிஸ்திரேட் முன்பு சாட்சியின் வாக்குமுலம்) மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை சம்பவம் 20ம் ேததி நடந்துள்ளது. மறுநாள் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. ஆனால், மாஜிஸ்திரேட் முன்பு சாட்சிகள் அடுத்த மாதம் 6ம் தேதிதான் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த தாமதம் மனுதாரருக்கு சாதகமாக உள்ளது.

சாட்சிகளின் வாக்குமூலம் நீதிமன்ற தீர்ப்புக்கு ஒத்துழைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழக்கில் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது. அவருக்கு வேலூர் விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
[7/23, 14:51] Sekarreporter1: அரசு வேலை வாய்ப்பில், கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களுக்கான முன்னுரிமை வழங்கக் கோரி பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களை வழங்க மறுத்த தகவல் ஆணைய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவன் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கலப்பு மணம் புரிந்து கொண்டவர்கள் என்ற சிறப்பு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சான்றிதழ்களை வழங்கக் கோரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்திருந்தார்.

சிறப்பு பிரிவின் கீழ் பதிவு செய்திருந்தவர்களின் பெயரை மட்டும் வழங்கிய தகவல் அதிகாரி, அவர்களின் சான்றிதழ்களை வழங்க மறுத்து விட்டார். இதை எதிர்த்த மேல் முறையீட்டை, தமிழ்நாடு தகவல் ஆணையமும் நிராகரித்தது.

இதை எதிர்த்து ஆதவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் பொது ஆவணம் என்பதால் அவற்றை வழங்க எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசுத்தரப்பு, மனுதாரர் கோரிய விவரங்கள் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விவரங்கள் என்பதால் சட்டப்படி அந்த விவரங்கள் தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு பிரிவின் கீழ் பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களில் அவர்களின் சாதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும் என்பதால், அவற்றை வழங்க மறுத்த தகவல் ஆணைய உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...