SEKAR REPORTER

Judge jayachandren order சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 1991 -96ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக பதவி வகித்த இந்திர குமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், வெங்கடகிருஷ்ணன். இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து, 2012ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வெங்கடகிருஷ்ணனும், மஞ்சுளாவும் வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், தண்டனை விவரம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று இருவரையும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான இருவரிடமும், தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய போது, குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என கோரினர்.

மேலும், இந்த வழக்கால் 27 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்ததாகவும், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் வழங்க வேண்டும் என இருவர் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெங்கடகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அக்டோபர் 25 ம் தேதி வரை அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version