Judge kirubakaran wife inyerview in Vikadan கிருபாகரனின் மனைவி எழில் பேட்டி


Published:17 Oct 2017 5 AMUpdated:17 Oct 2017 5 AM
நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுகொள்ள வேணாமே!
கு.ஆனந்தராஜ்

நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுகொள்ள வேணாமே!
நீதிக்குப் பின்னே…
“சமூக நலன் சார்ந்த புரட்சிகரமான தீர்ப்புகளை வழங்கி, மாற்றங்கள் உருவாவதற்கான தூண்டுகோலை மக்கள் கைகளில் கொடுப்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன். அக்கறையும் அதிரடியுமாக இவர் வழங்கிய தீர்ப்புகள் ஏராளம். “என் கணவரின் சமூகம் குறித்த சிந்தனைகள் குடும்பத்தினருடனான உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகின்றன’’ என்று புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் கிருபாகரனின் மனைவி எழில். 

“நான் எம்.ஏ, எம்.ஃபில் முடிச்ச நேரம், ‘எவ்வளவு ஃபீஸ் கொடுத்தாலும் கிரிமினல் மற்றும் விவாகரத்து வழக்குகளுக்கு வாதாட மாட்டார்… ரொம்ப நல்ல வக்கீல்’னு இவரைப் பத்தி பாசிட்டிவ் கமென்ட்ஸோட வரன் வர, `டபுள் டிக்’ போட்டுச் சம்மதம் சொன்னேன். 1995-ல் எங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, இவருக்குப் பத்து வருட வழக்கறிஞர் பணி அனுபவம் இருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் நெடும்பிறை கிராமத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியிலதான் படிச்சார். சட்டப்படிப்பு படிக்க சென்னை வந்தவர், தொடர்ந்து வக்கீலாகப் பணியைத் தொடர்ந்தார். 


திருமணத்துக்கு அப்புறம் நான் அவர்கிட்ட கேட்ட முதல் கேள்வி, `நீங்க ஏன் விவாகரத்து வழக்குகளுக்கு வாதாடுறதில்லை’ என்பதுதான். ‘தம்பதிகளைப் பிரிச்சு வைக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு குடும்பத்தை அழவெச்சுட்டு, இன்னொரு குடும்பத்துக்கு சந்தோஷம் தர்ற அந்த வெற்றி மேல எனக்கு ஆர்வம் இல்லை’னு அவர் சொன்னப்போ, ‘நாம அதிர்ஷ்டசாலிதான்’னு மகிழ்ந்தேன்’’ என்கிற எழில், தன் கணவரின் ஒரு விதிமுறை பற்றிச் சொன்னார்… 

‘`வீட்டுல எந்தக் கேஸ் பற்றியும் எங்ககிட்ட அவர் பேச மாட்டார். ‘மனுதாரரின் பர்சனல் விஷயங்களை யார்கிட்டயும் ஷேர் பண்ணக் கூடாது… வக்கீலோட குடும்பத்தார் உள்பட’னு சொல்வார். அதனாலேயே, 2009-ம் வருடம் அவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட நிகழ்வு, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அவர் தீர்ப்பு வழங்கினபோது நேரில் சென்று பார்த்ததுனு இதுவரை ரெண்டே முறைதான் நான் கோர்ட்டுக்கே போயிருக்கேன். நீதிபதியாகப் பொறுப்பேற்ற அன்று, ‘என் தீர்ப்புகளால் சமுதாயத்துக்கு நல்லது நடக்கணும்’னு மனதாரச் சொன்னார்.  அதையே எப்போதும் கடைப்பிடிக்கிறார்.

செய்தித்தாள்களில் சமூகப் பிரச்னைகள் சார்ந்த செய்திகளை `கட்’ செய்து ஃபைல் பண்ணி வெச்சுப்பார். செய்தி சேனல்களை இடைவிடாமல் பார்த்துக்கிட்டே இருப்பார். தமிழ் ஆர்வத்தோடு நிறைய புத்தகங்கள் படிப்பார். குடும்பத்தோட செலவழிக்கிற நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் கேஸ் விஷயத்துலேயே கவனம் செலுத்துவார். 

மக்களைப் பெரிதும் பாதிக்கிற சமூகப் பிரச்னைகளைப் பற்றி ஆழமா புரிஞ்சுக்கிறதுக்காக கூகுளில் விவரங்களைச் சேகரிப்பது, சட்டப் புத்தகங்களை ரெஃபர் பண்றது, அந்தப் பிரச்னை தொடர்பாக வெளியான முந்தைய தீர்ப்புகளின் விவரங்கள்னு தன்னுடைய பெரும்பாலான நேரத்தை நீதிபதி பணிக்குத்தான் செலவழிப்பார். சில முக்கியமான வழக்குகளுக்குத் தீர்ப்பு எழுதுவதற்காக, தூக்கமே இல்லாமல்கூட பல நாள்கள் உழைப்பார். சொன்னா நம்பமாட்டீங்க… அப்பப்போ கேஸ் பற்றி தூக்கத்துலகூட பேசுவார். சாப்பிடுறப்போ, எங்களோடு பேசுறப்போ, ஏன்… குளிக்கிறப்போகூட நடுவுல திடீர்னு நோட்ஸ் எழுதுவார். அதனால எங்க வீட்டுல ஒரு டைரி மட்டும் எல்லா ரூம்களிலும் ரவுண்ட் அடிச்சுட்டே இருக்கும். தீர்ப்புகள்ல அதிரடி காட்டினாலும், எல்லோர்கிட்டயும் ரொம்பவே பணிவோடுதான் பேசுவார்” என்கிற எழில், தாங்கள் அடிக்கடி விவாதிக்கும் சமூக விஷயங்களையும் பகிர்கிறார்…


“அவருடைய தீர்ப்புகளுக்கு பாசிட்டிவ், நெகடிவ்னு விமர்சனங்கள் கலந்தே வரும். அந்த விமர்சனங்கள்ல ஏதாச்சும் பயனுள்ள கருத்துகள் இருந்தா தாராளமா ஏத்துப்பார். அர்த்தமற்ற நெகட்டிவ் விமர்சனங்களைக் கண்டுக்க மாட்டார். எங்க 22 வருட கல்யாண வாழ்க்கையில நாங்க வீடு, பிள்ளைனு பேசினதைவிட சமூகப் பிரச்னைகள் பற்றித்தான் அதிகம் பேசியிருப்போம். அவரிடம் வரும் விவாகரத்து வழக்குகளில் தம்பதியர் இருவரும் இணைந்து வாழ நிறைய ஆலோசனைகள் கொடுத்து, நிறைய தம்பதிகளைச் சேர்த்து வெச்சிருக்கார். அதையும் மீறி விவாகரத்து வழங்க வேண்டி வரும்போது, ‘இன்னிக்கு ஒரு குடும்பம் பிரிஞ்சிடுச்சு’னு வேதனையோட சொல்வார். இன்றைய பெற்றோர் – பிள்ளை உறவுமுறையில் அன்பு குறைந்து இடைவெளி பெருகிட்டே வர்றதைப் பற்றி அடிக்கடி பேசுவோம். ‘செல்போன் பயன்படுத்துறதால பள்ளி மாணவர்களின் எதிர்காலம் ரொம்ப பாதிக்கப்படுது. இதற்குத் தீர்வா சீக்கிரமே ஏதாச்சும் ஓர் உத்தரவு பிறப்பிக்கணும்’னு சொல்வார்’’ என்று சொல்லும் எழில், “பிள்ளையுடன் அவர் வெளிப்படுத்தும் அக்கறையில் அன்பு, அறிவுரை இரண்டும் கலந்திருக்கும்” என்கிறார்.  

“அவர்கிட்ட எனக்கு ஒரு குறை இருக்கு. தன்னோட உடல்நலனில் அக்கறை காட்ட மறந்துடுறார். நீதிபதி அய்யா வாக்கிங் போய் பல மாசம் ஆகுது” என எழில் சொல்ல, வெள்ளைச்சட்டை, பட்டு வேஷ்டி உடுத்திவந்து நின்று, ‘`கோயிலுக்குப் போக நேரமாச்சும்மா…’’ என்கிறார் கிருபாகரன். இருவரையும் நம் கேமரா க்ளிக் செய்ய, “நாங்க ஜோடியா போட்டோ எடுத்து பல வருஷங்கள் ஆச்சு’’ என்று ஆனந்தமாகும் எழில், ‘`இப்போ நம்ம கல்யாணத் தருணம் என் நினைவுக்கு வருதுங்க’’ என்று சொல்ல, அந்த அன்பின் சிறையில் அடைக்கலமாகிறார் நீதிபதி!
“எனக்குப் பிடித்தத் தீர்ப்புகள்!”

“இயற்கை, பொதுநலன், குடும்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கிராம முன்னேற்றம், அடிதட்டு மக்களின் வாழ்க்கை உயர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். வழக்கறிஞரா கிரிமினல் கேஸ்களை வாதிட்டதில்லை என்றாலும், நீதிபதியாக அந்த கேஸ்களில் தீர்ப்பு சொல்ல அதில் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக்கிட்டார். ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது, முறையான உள் ஒதுக்கீடு அளிக்கப்படாததால் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தது, திருமணத்துக்கு முன்பு தம்பதிக்கு மருத்துவ ஆலோசனை, கிரிமினல் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள்மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது, சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் உடலை டெல்லி எம்ய்ஸ் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாய `சிசிடிவி’ கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டது, குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை வைக்கக் கூடாது, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை முறைப்படுத்த, குழந்தைகளின் படிப்புச் சுமையைக் குறைக்க வலியுறுத்தியது, ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சலிங், குற்றாலம் அருவியில் சிகைக்காய், எண்ணெய் பயன்படுத்தத் தடைவிதித்ததுனு அவர் வழங்கிய தீர்ப்புகள் பலவும் எனக்குப் பிடிக்கும்” என்கிறார் எழில்.
“அனிதாவுக்காக வருந்தினார்!”

‘`சமீபத்தில் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட கிருத்திகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், ‘நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், உயர் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கு’னு வேதனைப்பட்டார். ‘நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துவளக் கூடாது. விபரீத முடிவை எடுத்துவிடக் கூடாது. உடனடியாக அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிப்பது அரசின் கடமை’ எனத் தீர்ப்பளித்தார். ஆனால், அரசு அதைச் செய்யவில்லை. அடுத்த சில நாள்களிலேயே அனிதா தற்கொலை செய்துகொள்ள, அன்று மிகவும் சோர்ந்துட்டார். ‘இதுபோன்று இன்னொரு இழப்பு ஏற்படக்கூடாது’னு இப்போவரை சொல்லிட்டே இருக்கார்” என்கிறார் எழிலும் வருத்தத்துடன்.
அனிதாவுக்காக வருந்தினார்!”

You may also like...