kallakurichi case acj bench ask more question
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுசம்பந்தமாக மருத்துவமனை சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினர்.
மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களையோ, எத்தனை பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களையோ வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான கூடுதல் கண்காணிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிட வில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், எந்த அடிப்படையில் அவரது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது எனவும் மற்ற அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவும் ரத்து செய்யப்பட்டதா என நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகவும், மற்ற அதிகாரிகளை பொறுத்தவரை, அரசின் விளக்கத்தைப்கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தவர்களாக இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிற சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் தான் இந்த சட்டம் பொருந்தும் என வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், முதலில் இருவர் பலியான போது, கள்ளச்சாராயம் காரணமல்ல என எந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் எனக் கேள்வி எழுப்பியதுடன், விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய காவல் துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.