Madras high court march 25 orders

    [3/25, 11:14] Sekarreporter: தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்ததாக குற்ற்ம்சாட்டப்பட்டு, தலைமறைவாக உள்ள காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை சிறை பிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கியதாக, திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    வழக்கில் தலைமறைவாக உள்ள உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி சிபிசிஐடி போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

    புலன் விசாரணையில் உள்ள வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்க முடியாது எனக் கூறி சிபிசிஐடி – டி.எஸ்.பி.-யின் மனுவை நிராகரித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை ரத்து செய்து, மூன்று பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கும்படி எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி சிபிசிஐடி – டி.எஸ்.பி. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, குற்ற விசாரணை முறைச் சட்டம் 73வது பிரிவின் கீழ் புலன் விசாரணையில் உள்ள வழக்கிலும் பிடிவாரண்ட் பிறப்பிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.

    மேலும், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து, தலைமறைவாக உள்ள மூன்று காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
    [3/25, 13:04] Sekarreporter: தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேறுகால விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்திய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

    தர்மபுரி மாவட்டம் பி கோலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் உமாதேவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த 2006 இல் தனக்கு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2018 ல் கணவரை பிரிந்து விட்ட நிலையில் ராஜ்குமார் என்பவரை மறுமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்..தொடரந்து பேறுகால விடுப்பு கேட்டு, தர்மபுரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தபோது ,
    மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுதியின் அடிப்படையில், இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட பெண் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் மறுமணத்தின் காரணமாக மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விதி இல்லை என
    மறுத்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார் .தான் 2017இல் தான் அரசு பள்ளி ஆசிரியராக பணிக்கு
    சேர்ந்ததாகவும் எனவே தனக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நடைபெற்றது.
    வழக்கை விசாரித்த நீதிபதி,
    மகப்பேறு பலன்களைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத வரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த தடையையும் விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு மனுதாரருக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க உத்தரவிட்டுள்ளார். தாய்மையின் முக்கியத்துவத்துவம் மற்றும் ஆழமான புரிதலாலும் புதிதாகப் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்க்கப்பட வேண்டும் என்பதனால் பேறுகால விடுப்பை ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திய மாநில அரசை இந்த உயர்நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
    [3/25, 13:38] Sekarreporter: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது ..

    கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் இறுதி நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் 6 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கில் இறுதி நாள் பிரச்சார ஊர்வலத்தில் தான் பங்கேற்கவில்லை என்றும்,வழக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் எனவே தன் மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா,
    பாமக இளைஞரணிதலைவரும்,எம்பியுமான
    அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
    [3/25, 13:57] Sekarreporter: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

    இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்
    எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

    காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் 2ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
    [3/25, 15:01] Sekarreporter: பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளது.

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், அந்த கட்டுமானம் தங்கள் சொத்துக்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி பாப்பாயி என்பவர் தொடர்ந்த வழக்கில், நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோவிலுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து கோவில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குறிப்பிட்ட பொது பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    அதேசமயம், பொதுசாலையை யார் ஆக்கிரமித்தாலும், கோவிலாக இருந்தாலும், அதை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கடவுள் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளதாக கூறியுள்ள நீதிபதி, பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    [3/25, 15:42] Sekarreporter: நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருகளை வைத்துள்ள வணிக நிறுவனங்களை சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

    நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராக, மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும் இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வெறும் அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது எனவும் இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் வணிக நிறுவனங்களை மூடி சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    இதே போன்று நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு வழங்கும் நிலையங்கள் முறையாக செயல்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பழுதாகி உள்ள 33 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று இருக்கும் மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து ஏப்ரல் 9ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் வழங்கும் இடங்களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அன்று அதனை அன்று ஆய்வு செய்யவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
    [3/25, 16:18] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் வியாபாரம் செய்பவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிட்டால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து ஆய்வு செய்யும்படி யோசனை தெரிவித்து, வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.
    [3/25, 17:06] Sekarreporter: மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணையை தொடரலாம் எனவும், இழப்பீடு நிர்ணயம் செய்வது என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என பா.ம.க. தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது்.

    மாமல்லபுரத்தில், கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன.

    பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாமக தலைவர் ஜி.கே மணிக்கு அரசு போக்குவரத்துக் கழகமும், டாஸ்மாக் நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது.

    இதை எதிர்த்து பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி 2014இல் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீட்டை வசூலிக்க எவ்வித தடையும் இல்லை எனவும், நோட்டீஸுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதுசம்பந்தமான விசாரணையில் தலையிட மறுத்து விட்டார்.

    தனி நீதிபதி இந்த உத்தரவை எதிர்த்து ஜி. கே.மணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி உத்தரவு காரணமாக, இழப்பீடு குறித்த விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி விட்டதால், விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பா.ம.க. தரப்பில் கோரப்பட்டது.

    இதையடுத்து, இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பான விசாரணையை தொடரலாம் எனவும், இழப்பீடு நிர்ணயம் என்பது இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்கள் தள்ளிவைத்தனர்.
    [3/25, 17:06] Sekarreporter: பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்த வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் ஏப்ரல் 4 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு.

    பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

    அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது.
    மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் ஏப்ரல் 4 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதனிடையே நடிகை மீரா மிதுன் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    [3/25, 18:49] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் வரும் திங்கட்கிழமை (மார்ச் 28) பதவியேற்க உள்ளனர்

    உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி காலை 10 மணியளவில் பதவியேற்று வைக்கிறார்
    [3/25, 19:28] Sekarreporter: அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வணிக நோக்கத்துடன் இயங்கிவரும் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை வைக்க உரிமையில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

    தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    அந்த வழக்கில், ஒரு பைசா கூட செலுத்தாமல் அனுபவித்துவரும் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென 2018ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதேசமயம் அரசிடம் மேல்முறையீடு செய்ய இந்த தீர்ப்பு தடை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி அரசை அணுகி இடத்தை ஒதுக்கும்படியும் மாற்று இடமும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அந்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு பிப்ரவரி 23ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், நான்கு வாரங்களுக்குள் இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்திலிருந்து காலி செய்யும்படி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    31.37 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு ஒதுக்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பல்கலைகழகம் தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் டி. ராஜா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைகழகம் தரப்பில் 1984ஆம் ஆண்டு முதல் அரசு நிலத்தில் பல்வேறு கல்வி நிலைய கட்டுமானங்களை கட்டி, பல மாணவர்களுக்கு கல்வி வழங்கி வரும் நிலையில், தற்போது காலி செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், மாற்று இடம் தர தயாராக இருப்பதாகவும், வித்தியாச தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அரசு தரப்பில் திறந்தவெளி சிறைச்சாலை கட்டுவதற்காக குறிக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், சேவை நோக்கத்துடன் இல்லாமல் வணிக நோக்கத்துடன் செயல்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை வைக்க உரிமையில்லை என வாதிடப்பட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    [3/25, 20:56] Sekarreporter: ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும் பாலக்காடு – கோயம்புத்தூர் இடையே ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அவ்வழியே சென்ற யானைகள் கீழே சறுக்கி விழுவது போன்ற காணொளி வெளியானது.

    இதையடுத்து வனவிலங்குகளை பாதுகாக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயர் நீதிமன்ற உத்தரவு படி இயற்கைக்கு மாறாக யானைகள் இறப்பு, ரயில்களில் மோதி யானைகள் இறப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கபட்டது.
    தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், மாவட்ட ஆட்சியர், வனம், ரயில்வே, நெடுஞ்சாலை ஆகிய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். இக்குழு கடந்த 22 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வை நடத்தியது. யானைகள் வழித்தட பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் இது தொடர்பாக எடுக்கபட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிபான பதிலை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

    வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பான இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி நீதிபதிகள் முன்பு காண்பிக்கப்பட்டது.

    இதைப் பார்த்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடுவதற்கு உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார்.
    இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் கடுமையான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க நேரிடும் எச்சரித்தனர். வனம், மலைப்பகுதிகளில் மது பாட்டில்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, அப்பகுதியில் மாற்று வழியில் மது விற்பனைக்கு செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 9, 10 ஆகிய இரு நாள்கள், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் வழக்குரைஞர்கள் செல்வேந்திரன், சீனிவாசன் ஆகியோருடன் நாங்களும் (நீதிபதிகள்) நேரில் ஆய்வு செய்வோம் என உத்தரவிட்டனர். அன்றைய தினம் மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...