Madras high court october 19th order

[10/19, 11:18] Sekarreporter 1: தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலிசாரே விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலிசார் விசாரிக்க வேண்டுமெனவும், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின் தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீசாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஜூலை 18ம் தேதி உத்தரவுக்கு பிறகு தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 11 மரணங்கள் குறித்த வழக்குகள் சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கென பிரத்யேகமாக சிபிசிஐடி உருவாக்கப்பட்டதாகவும், எந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென வழக்கின் தன்மை குறித்து டிஜிபி முடிவு செய்வதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீசாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவு காரணமாக ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவையும் மாற்றியமைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்ற நீதிபதி, கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலிசாரே விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவு மாற்றியமைத்து உத்தரவிட்டார். இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலிசாரே விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல , கல்வித்துறை விசாரணைக்கு பின்னர் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்த நீதிபதி சதிஷ்குமார், வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார். மேலும், மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார்.
[10/19, 14:57] Sekarreporter 1: குழந்தைகள் ஆட்டோவில் விளையாடியதை தட்டிக் கேட்டவரை கொலை செய்ய முயற்சித்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் தெரு அருகே கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அப்பகுதியில் நின்ற ஆட்டோவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை சரவணன் (35) என்பவர் கண்டித்துள்ளார்.

தன் குழந்தைகளை கண்டித்த சரவணனிடம் குழந்தையின் தந்தை குமார் (45) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் குமாரை சரவணன் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த குமார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி சுமதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் சரவணன் மீது கொலை முயற்சி, அவதூறாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றது.அப்போது, காவல்துறை தரப்பில் சென்னை மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பகவதி ராஜ் ஆஜராகி குழந்தைகள் முன்னிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்றும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
[10/19, 15:50] Sekarreporter 1: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். சிவசங்கர் பாபா தரப்பில், மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதால், சட்டப்படி வழக்கை தொடர்ந்து நடத்த தடை உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்றுக் கொள்ளக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், பாலியல் தொல்லை என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களால் உடனடியாக புகார் அளிக்க தயங்குவதாகவும், இதற்கு வெறும் அச்சம் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்வாக்கும் காரணம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

செல்வாக்கான நபர்களின் சட்டவிரோத செயல்கள் ஒரு நாள் வெளியில் வரும் போது, அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்க முன்வருவது இயல்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அதேபோல இந்த வழக்கிலும் தாமதாமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
[10/19, 16:47] Sekarreporter 1: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.

அவை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதைய தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக உள்ள செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
[10/19, 18:08] Sekarreporter 1: கடன் மோசடி வழக்கில் சிபிஐ-யால் குற்றம்சாட்டப்படாவிட்டாலும், மோசடி பணத்தின் மூலம் சொத்துக்கள் வாங்கியவருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு குளோபல் டிரேட் பைனான்ஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில், போலி ஆவணங்களைக் கொடுத்து 15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக ஜி.சீனிவாசன், ஆர்.மனோகரன் மற்றும் வங்கி மேலாளர் எஸ்.அறிவரசு உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த 15 கோடி ரூபாயை பயன்படுத்தி, புதுக்கோட்டை என்ற கிராமத்தில் பி.வெங்கடாச்சலபதி, பி.ராஜேந்திரன் மற்றும் கே.விக்னேஷ் ஆகியோரது பெயர்களில் ஜி.சீனிவாசன் 166 ஏக்கர் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தி்ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தனக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி பி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், மோசடியாக பெறப்பட்ட பணத்தின் மூலமாக மனுதாரர் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளதால், அவர் குற்றச்செயலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்பதால் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதில் எந்த விதிமீறலும் இல்லை, என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லை என்றாலும், குற்றத்தின் மூலமாக பெறப்பட்ட தொகையில் மனுதாரர் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதால், அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் அல்ல, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
[10/19, 18:10] Sekarreporter 1: நடிகை மீராமிதுன் தொடர்ந்து மாயமாகி உள்ளதாக காவல் துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்தும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்க இருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க முயற்சித்து வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் பயன்படுத்திய ஒரு மொபைலும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
[10/19, 21:03] Sekarreporter 1: தொழிலதிபரை கடத்தி, சிறை வைத்து, 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக உதவி ஆணையர் உள்ளிட்ட போலீசாருக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை கடத்திச் சென்று, சிறைப்படுத்தி, 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொழிலதிபர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட சிவகுமார் உள்ளிட்டோரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கில் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதால் புலன் விசாரணையில் தலையிட முடியாது என்றும் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மாநில போலீசார் குறிப்பாக உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

வழக்கை முழுமையாக விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...