Madras high court orders April 26

[4/25, 11:19] Sekarreporter: பப்ஜி மதன் குண்டாஸ் ரத்து 9 மாத சிறைக்கு பிறகு ஐகோர்ட் உத்தரவு sekarreporter
[4/25, 11:32] Sekarreporter: ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொண்டு, தமிழக கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் கடந்த 1960ம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுசம்பந்தமான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனவும், ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ – மாணவிகள் அணிந்து வருவதாகவும், இது சீருடை விதிகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவமின்மையை ஏற்படுத்துவதை தடுக்கவும், கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை போல தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்கவும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாதாக கூறியுள்ளார்.

நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்பதால், தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகள் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமுள்ளதாகவும், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக மட்டுமல்லாமல் பொதுவாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[4/25, 12:05] Sekarreporter: குண்டர் சட்டத்தில் பப்ஜி மதனை சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்.

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், மனதைச் செலுத்தாமல் தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு எனவும் கூறியுள்ளார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதரார் குன்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த போது அளித்த கோரிக்கை மனுவை அரசும், காவல்துறையும் உரிய காலத்தில் பரிசீலிக்க வில்லை எனவே மதனுக்கு எதிரான குன்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யபடுவதாக தீர்ப்பளித்துள்ளனர்
[4/25, 12:06] Sekarreporter: முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு…

மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமையில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு…

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி ஜெயக்குமார் மனு மீது உத்தரவு…

ஆஜராகிறார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை – காவல்துறை

விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு…

திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டுமென ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கு

அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையேயான பிரச்சினையில் அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்ததாக வழக்கு
[4/25, 12:30] Sekarreporter: நில அபகரிப்பு வழக்கில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தியும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினையில், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி, நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், இரு வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் போலீசில் கையெழுத்திட வேண்டும் என்றும்,அதன் பின்னர் திங்கட்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார்.

இதன்படி ஜாமீனில் வெளிவந்த ஜெயக்குமார் வாரந்தோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் திங்கள்கிழமை தோறும் கையெழுதிட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் ஆஜராகி ஜெயக்குமார் வாரந்தோறும் ஆஜரானாலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி, நிபந்தனைகளை தளர்த்த கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

அப்போது ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி திருச்சியிலும், சென்னையிலும் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றுவதாகவும், தனது மருமகன் தொடர்பான விவகாரத்தில் தன்னிடம் விசாரிக்க வேண்டியது ஒன்றும் இல்லை என்றும் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, காவல்துறை முன்பு ஆஜராக செல்லும்போது 200 பேருடன் செல்வதை செய்திகளில் பார்ப்பதாகவும், அவ்வாறு செல்வது ஏன் என கேள்வி எழுப்பி, விசாரணைக்க்கு போதிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டதுடன், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டுமென நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
[4/25, 14:51] Sekarreporter: டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விசிக-வினருடன் தகராறில் ஈடுப்பட்டதாக பதிவான வழக்கில் பாஜக-வை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை கேயம்பேட்டில் கொண்டாடப்பட்டபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அங்குவந்த பாஜக சேர்ந்தவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் குறித்து விமர்சித்ததாக இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பிலும் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் கட்சி கொடிகளை கீழே போட்டு மிதித்ததாகவும், கல்வீசி தாக்கியதாகவும், விசிக சார்பில் புதிய குமார் என்பவர் அளித்த புகாரில் தன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள காரணத்தினால் விசிக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை முதலில் எடுத்து கொண்டனர் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த தகராறு குறித்து முதல் தகவல் அறிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் முதலில் தாக்குதலில் ஈடுபட்டனர் எனவும், ஏற்கனவே சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடன் கட்சி சார்ந்த சண்டைகளும் நடைபெற்று வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், 30 நாட்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
[4/25, 15:42] Sekarreporter: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, சிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறியுள்ளனர்.

மேலும், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தர்ப்பில், கடந்த 2000ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளதாகவும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு, இன்று வரை உறுப்பினராக உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதை மறுத்து அதிமுக நிர்வாகிகள் தரப்பில், உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததாக கூறி மனுதாரர் தாக்கல் செய்த ஆவணம் போலியானது என வாதிட்டனர்.

மேலும், கட்சியில் ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் மனுதாரர், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உண்மையான உறுப்பினர் அட்டையை தாக்கல் செய்ய மனுதாரர் ராம்குமார் ஆதித்தனுக்கு உத்தரவிட்டு, வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.
[4/25, 16:48] Sekarreporter: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தின்படி காடு வளர்ப்பு திட்டங்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும்கூட, வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகள் சேர்க்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம் எனவும், அன்னிய மரங்களை அகற்ற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசே விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தின்படி காடு வளர்ப்பு திட்டங்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும்கூட, வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகள் சேர்க்கப்படாததால் அந்த நிதியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[4/25, 17:47] Sekarreporter: மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி வழங்கக் கோரி,
தயரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக நடிகர் சிவ கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சமரச தீர்வாளர் (Arbitrator) நியமித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 4 கோடி 80 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளதாகவும், அதனை வழங்க பட தயாரிப்பாளர்
ஞானவேல்ராஜா உத்தரவிட கோரியும், அதுவரை அவரின் தயாரிப்பில் வெளியாக உள்ள பத்து தலை, சீயான் 61, ரீபெல் (rebal) படங்களை இணையதளம் உள்ளிட்டவைகளில் வெளியிட தடை விதிக்க கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர்
ஞானவேல்ராஜா தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் பல உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவம் மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம், மற்றும் விநியோகிஸ்தர்கள் பிரச்சனை குறித்து வழக்கில் எந்த தகவலும் அளிக்கவில்லை எனவும் எனவே அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை (Arbitrator) நியமித்து பிரச்னை தீர்வு காண உத்தரவிட்டார்.

அதேசமயம், ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எற்க முடியாது என தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தார்.
[4/25, 17:53] Sekarreporter: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத தனியார் பள்ளி சமஸ்கிருத பண்டிட் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் சமஸ்கிருத பண்டிட் பணியிடத்தை நிரப்ப அரசு அனுமதியளித்தது.

இதையடுத்து, காலியிடம் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அறிவிப்பை வெளியிட்ட பள்ளி நிர்வாகம், பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டு, நேர்முகத் தேர்வு நடத்தி, பிரசாந்த் என்பவரை நியமித்தது.

அவரது நியமனத்துக்கு ஒப்புதல் கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும் விண்ணப்பித்தது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவில்லை எனக் கூறி, பிரசாந்தின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பிரசாந்த் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, சமஸ்கிருத பண்டிட்டுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்கவில்லை எனவும், தகுதித் தேர்வு எழுதாத மனுதாரர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி கோர எந்த உரிமையும் இல்லை எனவும் பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத மனுதாரர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்பதால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[4/25, 17:59] Sekarreporter: குடும்பத் தகராறில் மனைவியை கழுத்தை நெரிந்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கிண்டி மடுவங்கரை பகுதியில் பிரசாத் என்பவர் தனது மனைவி உஷா ராணி மற்றும் அவரது ஐந்து வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.

பிரசாத், அவ்வவ்போது வீட்டிலிருந்து பணத்தை எடுத்து, குடித்து விட்டு மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு மனைவிக்கு தெரியாமல், பைக்கை விற்றது தொடர்பாக கேள்வி எழுப்பிய மனைவியை வாஷிங் மிஷின் பைப்பால் கழுத்தை நெரிந்து கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக கிண்டி போலீசார் பதிவு செய்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி, பிரசாத்துக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையில் 8 ஆயிரம் ரூபாயை, 5 வயது பெண் குழந்தைக்கு வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கூடுதல் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[4/25, 18:04] Sekarreporter: நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.

பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்ததாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15 ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மசினக்குடியில் தனியார் ஹோட்டல்கள், மதுபானங்களை பாட்டிலுடன் விற்பனை செய்வதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜூன் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
[4/25, 20:31] Sekarreporter: தமிழகம் கீழமை நீதிமன்றங்களில் உள்ள 55 நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தலைமை பதிவாளர் பி. தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிபதி கே.ஐயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தின் தமிழ் சட்ட இதழின் முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் உள்ள ஜெ.ப்ளோரா, காஞ்சிபுரத்தில் உள்ள ஜெ.சந்திரன், சேலத்தில் உள்ள எஸ்.முருகானந்தம், எல். ஆப்ரஹாம் லிங்கன், தூத்துக்குடியில் உள்ள வி.பாண்டியராஜ், பூந்தமல்லியில் உள்ள ஏ.ரமேஷ், வேலூர் திருப்பத்தூரில் உள்ள ஆர்.தூதிராமேரி ஆகியோர் சென்னையில் உள்ள நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் பணியாற்றும் ஜெ. ஸ்ரீதேவி, டி.வி.ஆனந்த், எஸ்.சுஜாதா, டாக்டர் எஸ் டி.லக்‌ஷ்மி ரமேஷ் சென்னையிலேயே வெவ்வேறு நீதிமன்றங்களில் பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல நாகர்கோவில், மேட்டூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஈரோடு, பெரம்பலூர், தேனி, திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் என 55 நீதிபதிகள் இடமாற்றம் செய்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

You may also like...