Madras high court orders nov 9

[11/10, 11:09] Sekarreporter 1: புதுச்சேரியில் அரசு பணி நியமனங்கள் விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுவை பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக, முறையற்ற பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதால் கூறி, பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுவை பொதுப்பணி துறையில் எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களுடன் இன்று நேரில் ஆஜராக அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி பொதுப்பணித்துறை செயலாளர் குமார் நேரில் ஆஜராகியிருந்தார்.

புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அரசுப் பணி நியமனங்கள் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும் என உறுதி தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விதிகளை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[11/10, 12:13] Sekarreporter 1: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 16 ம் தேதி ஒத்திவைத்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஆன் லைன் விளையாட்டுகளை
பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக்கூடாது என்று நிபந்தனை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடுதான் விளையாட்டுகள் வழங்கப்படுவதாகவும், அடிமை ஆவதை தடுப்பதற்கான சோதனைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசு
ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமையான விளையாட்டுகளை சூதாட்டம் என கூறி தடை செய்த தை உயர் நீதிமன்றத்தின கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மீண்டும் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசரச் சட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போக்கர் மற்றும் ரம்மி ஆகியவை திறமைக்கான விளையாட்டுகள், இதில் திறமையான வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும்,
1957 ஆம் ஆண்டின் மேற்கு வங்க சூதாட்டம் மற்றும் பரிசுப் போட்டிகள் சட்டம் ‘கேமிங் அல்லது சூதாட்டம்’ என்ற வரையறையிலிருந்து போக்கரை விலக்கியுள்ளதாகவும், 2009 இன் சிக்கிம் அரசு ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் போக்கர் மற்றும் ரம்மியை உரிமத்தின் கீழ் விளையாட அனுமதிக்கின்றன என்றும், நாகாலாந்து அரசு , போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாக வகைப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாகக் கருதுவதாகவும், அதை பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் எல்லைக்கு வெளியே வைத்துள்ளது எனவும் மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ரவரத்தி அமர்வு, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
[11/10, 13:24] Sekarreporter 1: மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதய விழாவை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே நடத்த அனுமதிக் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ராஜ ராஜ சேனை அறக்கட்டளையின் நிறுவனர் முரளி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் சோழ பேரரரசர் ராஜ ராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் பெருமையாக கொண்டாடப்படுவது போல, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளில் நவம்பர் 13ம் தேதி கொண்டாட திட்டமிட்டு, அதற்கு அனுமதிக் கோரி மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ராஜ ராஜ சோழனின் பெருமையை மூடி மறைக்கும் வகையிலேயே அனுமதி மறுத்த மயிலாப்பூர் காவல் ஆய்வாளரின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள்தாகவும், சந்தேகம் எழுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே நவம்பர் 13ம் தேதி அல்லது மற்றொரு நாளில் சதய விழா கொண்டாட அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் நெரிசல்மிக்க மாட வீதிகளில், 500 பேர் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதுபோன்ற சதயவிழா சென்னையில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார்.

இதுவரை இல்லாமல் சென்னையில் தற்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன என நீதிபதி கேள்வி கேள்வி எழுப்பிய நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அல்லது வேறு இரு இடத்தில் நடத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கபட்டது.

இதையடுத்து வழக்கு குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தினர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
[11/10, 14:53] Sekarreporter 1: சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது.

இதுதொடர்பாக மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.

இதையடுத்தி மாணவியை மீட்கக் கோரி மாணவியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியை உடனடியாக விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கைது செய்யப்பட்ட மாணவன், சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டதாகவும், தற்போது அவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்திருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என சிறார் நீதி சட்டத்தில் கூறியுள்ள நிலையில் மாணவனை கைது செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனத் தெரிவித்து, நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் இ.வி.சந்துருவை நியமித்து, இதுசம்பந்தமான உச்ச நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்டு கருத்துக்களை, இரு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல, இதுசம்பந்தமாக கருத்துக்களைப் பதில்மனுவாக தாக்கல் செய்யும்படி, தமிழக உள்துறை செயலாளர், சுகாதார துறை செயலாளர், மகளிர் நலன் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[11/10, 14:59] Sekarreporter 1: திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயருக்கு பதிலாக, கொடி காத்த குமரனின் பெயரை வைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2019ம் ஆண்டு பழைய திருப்பூர் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை சீரமைக்க ரூ. 36.5 கோடியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியதாகவும், மேலும், சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், புதிய பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்டப்படும் என எடப்பாடி அறிவித்தார்.

சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக தயராக உள்ள நிலையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு “கருணாநிதி மத்திய பேருந்து நிலையம்” என மாற்ற தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும், இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கூடுதல் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்ததாகவும், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்தார்.

தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், கருணாநிதி பெயரை சூட்ட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை வந்தபோது, தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, திருப்பூர் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றி, அதை தமிழக அரசிற்கு அனுப்பியதாகவும், அதற்கு அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் எவ்வித முகாந்திரம் இல்லை என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[11/10, 16:55] Sekarreporter 1: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை, 30 சதவீதமாக உயர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில பாரதிய சத்திரிய மகாசபா சார்பில் அதன் தேசிய துணை தலைவர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் முன், 0.15 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 2,656 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும், 500 மாணவர்கள் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற முடியாத நிலையில் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற 2,656 மாணவர்களும் மாணவர் சேர்க்கையை பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக அதிகரிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.
[11/10, 17:06] Sekarreporter 1: மது போதையில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு போலீசாரை பணி நீக்கம் செய்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த மகளிர் விடுதிக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகிய இருவரும், மதுபோதையில் சென்று, அங்கிருந்த இரு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

இதுசம்பந்தமாக இரு பெண்களும் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி உதவி ஆணையர் விசாரண நடத்தினார். பின்னர், துறை ரீதியான விசாரணைக்குப் பின், இரு போலீசாரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை மேல் முறையீட்டு அதிகாரியான மாநகர காவல் ஆணையரும் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து இரு போலீசாரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, இரு போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதாலும், புகார் அளித்த இரு பெண்களிடமும் விசாரணை நடத்தப்படவில்லை என்பதாலும், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

புகார்தாரர்களை உதவி ஆணையர் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண ஆதாரங்களைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என எந்த சூழ்நிலையிலும் கருத முடியாது எனவும், விசாரணை விதிகளும், இயற்கை நீதியும் முறையாக பின்பற்றப்பட்டு பிறப்பிக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு சரி தான் எனவும், இரு போலீசாரும் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் கூறி, இரு போலீசாரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[11/10, 21:21] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 இடங்களில் அமைக்கப்படவுள்ள மஞ்சப்பை வழங்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தை துவக்கி வைத்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியபோது, 1907-ம் ஆண்டு பெல்ஜியத்தில் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தபோது உலகமே வரவேற்றதாகவும், 115 ஆண்டுகளுக்கு பிறகு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதுதான் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

நீர்நிலை, சுற்றுச்சூழல், வனம், கடல் அனைத்தும் பிளாஸ்டிக்கினால் மாசடைந்து, உலகமே பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டதாகவும், கால்நடைகள் கூட பிளாஸ்டிக்கை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புற்றுநோய் அதிகரிக்க பிளாஸ்டிக் பொருட்கள் தான் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வளாகமும் பிளாஸ்டிக் இல்லாத மஞ்சப்பையுடன் கூடிய பசுமை சூழலுக்கு மாற வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

You may also like...