அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையின் பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக கடந்த 10ம் தேதி மின்னனு முறையில் டெண்டர் தமிழ்நாடு அரசு கோரியது.

இந்நிலையில், டெண்டரை ரத்து செய்யக்கோரி கிருத்திகா எலக்ட்ரிக்கல் எண்டர்பிரைஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ஏழுமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டெண்டருக்கு விண்ணப்பிக்க உரிய அவகாசம் அளிக்காமல் வெளிப்படை தன்மை இல்லாமல் டெண்டர் கோரப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், உரிய விதிகளை பின்பற்றி டெண்டர் அறிவிக்கப்படாததால் தங்களால் டெண்டரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே டெண்டரை ரத்து செய்ய உரிய விதிகளை பின்பற்றி டெண்டர் மீண்டும் அறிவிக்குமாறு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.

மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் வர்த்தக பிரிவு மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...