இணையதள ரம்மி சூதாட்டத்தை ஒழித்த இணையில்லா முதல்வர் இரா. விடுதலை மூத்த வழக்கறிஞர் வள்ளுவரின் வழி அரசு: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற் பொன் மீன் விழுங்கியற்று” என்றார் திருவள்ளுவர். வெற்றியே பெற்றாலும் சூதாட்டத்தை நாடாதே. அவ்வாறு சூதாட்டத்தில் பெற்ற வெற்றி, தூண்டிலில் உள்ள புழுவை தனக்கு உணவு கிடைத்து விட்டது என்று மகிழந்து மீன் அதை சாப்பிட்டு பின்னர் அத்தூண்டிலிலேயே அகப்பட்டு உயிர் விடுவதற்கு ஒப்பாகும் என்றார்.

இணையதள ரம்மி சூதாட்டத்தை ஒழித்த இணையில்லா முதல்வர்

இரா. விடுதலை
மூத்த வழக்கறிஞர்

வள்ளுவரின் வழி அரசு:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற் பொன் மீன் விழுங்கியற்று” என்றார் திருவள்ளுவர். வெற்றியே பெற்றாலும் சூதாட்டத்தை நாடாதே. அவ்வாறு சூதாட்டத்தில் பெற்ற வெற்றி, தூண்டிலில் உள்ள புழுவை தனக்கு உணவு கிடைத்து விட்டது என்று மகிழந்து மீன் அதை சாப்பிட்டு பின்னர் அத்தூண்டிலிலேயே அகப்பட்டு உயிர் விடுவதற்கு ஒப்பாகும் என்றார்.

அய்யன் திருவள்ளுவனுக்கு வள்ளுவர் கோட்டம் அமைத்து மேலும் தென் தமிழ் நாட்டில் குமரியில் 1330 அடிசிலை வைத்து சிறப்பித்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் வழித்தோன்றலான நமது பொற்கால முதல்வர் அவர்கள், ஆளுநர் கொடுத்த தொல்லைகளை எல்லாம் கடந்து இணையதள ரம்மி சூதாட்டத்தை ஒழித்து
சட்டமியற்றியுள்ளார். இதனால் இளைய தலைமுறைக்கு நல் வழி காட்டி, இந்த சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையான பலரது இன்னலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களது குடும்பங்களுக்கு நிம்மதி அளித்துள்ளார். இத்தகைய சூதாட்டத்தினால் நல்லவர்கள் கூட நாடு இழந்த கதை நாம் அறியாததல்ல.

சூதாட்டத்தடை சட்டங்கள்:

இந்தியாவில் சூதாட்டம் குறித்து முதன் முதலாக சட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு
வரப்பட்டது. 1867 ஆம் ஆண்டு பொதுச் சூதாட்டச் சட்டம் (Public Gaming Act 1867) கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் முதலில் , கிழக்கு பஞ்சாப், டெல்லிமற்றும் சில மத்திய மாகாணங்களில் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் மற்ற மாகாணங்களுக்கும் விரிவாக்க வழி வகை செய்யப்பட்டது. பொது இடங்களில் சூதாடுவது மற்றும் பொது சூதாட்ட இடங்கள் அமைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது மற்றும் ஈடுபடச் செய்வது குற்றமாக்கப்பட்டு அதற்கு தண்டனையும் வழங்க இந்தச் சட்டம் வழிவகுத்து.

மதராஸ் சூதாட்டச் சட்டம் 1930

இதே போல் தமிழ் நாட்டில் முதன் முதலில் சூதாட்டத்தை தடை செய்ய சூதாட்ட இடங்கள் அமைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க மதராஸ் சூதாட்டச் சட்டம் 1930 அன்றைய மதராஸ் மாகாண அரசால் கொண்டு வரப்பட்டது. சென்னை நகர போலீஸ் சட்டத்திலும் உரிய திருத்தம் கொண்டு வரப்பட்டு சூதாட்ட ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இத்தகைய சட்டங்கள் செல்லும் என்று ​​உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு கிருஷ்ண சந்திரா எதிர் மத்தியப் பிரதேச அரசு (AIR 1965 SC 307) என்ற வழக்கில் தீர்ப்பளித்து.

குதிரைப் பந்தய ஒழிப்பு சட்டம்:
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது ஆட்சிக் காலத்தில் 1974 ஆம் ஆண்டு தமிழ் நாடு குதிரைப் பந்தய ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழ் நாட்டில் குதிரைப் பந்தயம் ஒழிக்கப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் செல்லாது என வழக்கு தொடுக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் குதிரைப் பந்தய ஒழிப்பு வழக்கின் தீர்ப்புரையில், குதிரைச் சவாரி என்பது குதிரை மற்றும் சவாரி செய்பவரின் சிறப்பு திறன்களை உள்ளடக்கிய ஒரு அகில உலக விளையாட்டு. குதிரைப் பந்தயம் தனித்தன்மை வாய்ந்தது . இதை சூதாட்டமாக கருதக்கூடாது. இத்தகைய திறன் அடிப்படையிலான செயல் அரசியலமைப்புச் சட்டம் 19(1)(g) இன் கீழ் அடிப்படை உரிமையாக பாதுகாக்கப் படுகிறது எனவே, தமிழ் நாடு குதிரைப் பந்தய ஒழிப்புச் சட்டம் 1974 அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்து இந்தச் சட்டத்தை ரத்து செய்தது. இருப்பினும் இந்தத் தீர்ப்பு ஆட்டத்தின் தன்மையை மட்டுமே தீர்மானித்தது. இது தொடர்பான பெட்டிங் எனப்படும் பந்தய முறையைப் பற்றி தீர்மானிக்கவில்லை.

ரம்மி விளையாட்டு:
ரம்மி விளையாட்டு வாய்ப்புக்கான விளையாட்டா?அல்லது திறமைக்கான விளையாட்டா? என்ற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலம் எதிர் Kசத்தியநாராயணா என்ற வழக்கில் ( AIR 1968 SC 825) பரிசீலனைக்கு வந்தது. இந்த விஷயத்தில், ரம்மி விளையாட்டானது ‘த்ரீ கார்டு கேம்’ போன்று முற்றிலும் வாய்ப்புள்ள விளையாட்டு அல்ல ரம்மிக்கு கார்டுகளை வைத்திருப்பதிலும் நிராகரிப்பதிலும் கணிசமான திறமை வேண்டும். இருப்பினும், இது சூதாட்டமாக ஆடப்படுகிறது என்று ஆதாரம் இருந்தால் கிளப்பின் உரிமையாளர் ரம்மி விளையாட்டின் மூலம் லாபம் ஈட்டுகிறார் என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மனோரஞ்சிதம் மனமகிழ் மன்றம் வழக்கில் (AIR 2005 Mad 261) உச்ச நீதி மன்றத் தீரப்புகளை மேற்கோள் காட்டி சூதாட்டத் தடுப்பு நடவடிக்கைகள் செல்லும் என்று இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதி மன்ற அமர்வும் தீர்ப்பளித்தது.

தீரப்புகளின் சாராம்சம்:
மேற்கூறப்பட்ட தீர்ப்புகளின் சாராம்சம் ஒரு விளையாட்டு அல்லது செயல் சூதாட்டமா? அல்லவா? என்பது ஆட்டத்தின் தன்மையை மட்டுமல்ல அந்த ஆட்டம் ஆடப்படும் முறையைப் பொறுத்தும் எதற்காக ஆடப்படுகிறது? எப்படி ஆடப்படுகிறது ? எந்த பலனுக்காக ஆடப்படுகிறது ?என்பன போன்ற அனைத்துக் கூறுகளையும் கொண்டு அமைகிறது என்பதாகும். இதை தீரமானிக்குள ம் உரிமை மற்றும் சூதாட்டம் என்று கருதப்பட்டால் சட்டம் இயற்றும் உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 7 ல் இரண்டாவது பட்டியலில் 34 ஆவது பொருளில் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இணைய தள ரம்மி:

ரம்மி என்பது 52 கார்டுகளை வைத்து விளையாடப்படும் ஒரு பொழுது போக்கு விளையாட்டு சிலர் அதில் பணம் வைத்து விளையாடி ஆட்ட முடிவின் அடிப்படையில் வென்றவர் பணம் பெறுவதும் தோற்றவர் பணம் இழப்பதும் என்று வரும்பொழுது அது சூதாட்டம் என்று கருதப்படுகிறது. எந்த ஒரு விளையாட்டும் மற்றும் அதைச் சாரந்த செயலின் முடிவும் திறமையின் அடிப்படையில் அல்லாமல் வாய்ப்பு அல்லது சந்தர்ப்பத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருந்தால் அது சூதாட்டப் பந்தயம் என்பதே சட்டத்தின் நிலைப்பாடு. இதைத்தான் ஆங்கிலத்தில் பெட்டிங் மற்றும் கேம்ப்லிங் என்று கூறுவார்கள்.

உரிமையும் கடமையும்:
எந்த ஒரு விளையாட்டு மற்றும் மற்றும் எந்த ஒரு செயலின் முடிவும் கணிசமானஅளவு திறமையின்அடிப்படையில் இருந்தால் அது சூதாட்டமாகாது என்ற ஒரு கருத்தை உச்ச நீதிமன்றம் கூறினாலும் திறமையின் அடிப்படையில் உள்ள செயல் எது? வாய்ப்பின் அடிப்படையிலான செயல் எது ? மற்றும் திறமை மற்றும் சந்தர்ப்பம் இரண்டும் கலந்திருந்தால் அது சூதாட்டமா இல்லையா? இதை யார் தீர்மானிப்பது என்ற வினாக்கள் தான் சட்டப் பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைகின்றது. கணிசமான அளவு திறமையின் அடிப்படையில் அமைந்த பந்தயத்தின் முடிவு சூதாட்டமல்ல என்று உச்ச நீதி மன்றம் கருதினாலும் அத்தகைய அளவு கோலை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஒரு பந்தையத்தை சூதாட்டம் என்று கூறி அத்தகைய சூதாட்டத்தை தடை செய்யும் உரிமை மற்றும் கடமை மாநில அரசுக்கு உண்டு என்பதும் சட்டத்தின் நிலைப்பாடு தான்.

இந்தியஅரசியல் அமைப்புச்சட்டம்:
அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 3 இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையை வரையறுக்கின்றது. இதில் பிரிவு 19(1)(g)இல் விரும்பும் தொழிலை செய்யும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த உரிமையிலும் பொதுநலன் கருதி தகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் கடமை அரசுக்கு உண்டு என்பதை பிரிவு 19(6) தெளிவு படுத்துகிறது. இதே போல் அரசியல் அமைப்புச்சட்டம் பகுதி 4 அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகளை (Directive Principles of State Policy) வரையறுக்கிறது. இதில் பிரிவு
“ 39 (f) நலஞ்சார் முறையிலும் சுதந்திரமும் கண்ணியமும் நிலவும் சூழ்நிலைகளிலும் வளர்ச்சியுறுவதற்கான வாய்ப்புநலன்களும் வளவசதிகளும் சிறார்கள் பெறுமாறு செய்தல்; மேலும், பிறர் நலனுக்காகக் குழந்தைப் பருவத்தினரும் இளமைப் பருவத்தினரும் கருவிகளாக்கப்படுவதினின்றும் ஒழுக்கமும் உயிர்வாழ் வசதியும் அற்றுப்போகுமாறு கைவிடப்படுவதினின்றும் பாதுகாத்தல்.” என்று தெளிவாகக் கூறுகிறது.
கற்காலமும் கணினி காலமும்:
கற்காலத்திலிருந்து கணினி காலத்திற்கு நாம் மாறியுள்ளோம். இது மனித இன வளர்ச்சியை காண்பிக்கின்றது. எனவே கணினி காலத்தில் இத்தகைய சூதாட்டங்கள் புதியப்புதிய பரிணாமங்களைப் பெறுகின்றன. இணைய தள ரம்மி சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் பலர் விரைவாக பணம் சேரக்க வேண்டும் என்கின்ற ஆசையில் இந்தச் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார்கள். பல குடும்பத் தலைவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை விரயம் செய்து வருகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் ( Artificial Intelligence) ஆழம் அறியப்படாத நிலையில் இத்தகைய பணம் வைத்து விளையாடப்படும் இணைய தள ரம்மி சூதாட்டத்தடை சட்டம் அனைவரும் வரவேற்க வேண்டிய மக்கள் நலம் நாடும் சட்டமாகும்.
இணையற்ற இரண்டாண்டுகள்
அடுத்தத் தலைமுறையைப் பற்றி சிந்திப்பவரே உண்மையான தலைவர் என்கின்ற பொன்மொழிக்கேற்ப பொற்கால திராவிட மாடல் ஆட்சி நடத்தி பல குடும்பங்களும் பலனடைந்து பாராட்டும் இத்தகைய சீர்மிகு சட்டங்களை இயற்றி இணையற்ற இரண்டாண்டு காலத்தை மக்கள் மன நிறைவோடு நிறைவு செய்துள்ள நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை உளமாரப் பாராட்டி வணங்கி மகிழ்கிறேன்

You may also like...