உச்சநீதிமன்றத்தின் நிரந்தர கிளைகள் டெல்லி மும்பை சென்னை கொல்கத்தா ஆகிய நான்கு இடங்களில் அமைக்க வேண்டும் தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழு கோரிக்கை

தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழு நிர்வாகிகள்
கலந்துரையாடல் அவசரக் கூட்டம்

இன்று 27.2.2022 காணொளி வாயிலாக திராவிட முன்னேற்றக் கழக சட்டதிட்ட திருத்த குழுவின் அவசரக்கூட்டம் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களது தலைமையில் நடந்த கூட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினர், கழக சட்ட திட்ட திருத்த குழு செயலாளர் – மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி., அவர்கள் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் இணைச் செயலாளர்கள் பி. குமரேசன், ஆர்.தாமரைசெல்வன், Ex M. P, ஒரத்தநாடு ராஜமாணிக்கம் எக்ஸ் எம்எல்ஏ, தஞ்சை சி. இறைவன் (தஞ்சை நகர்மன்ற முன்னாள் தலைவர் ) வடசென்னை மனோகரன், சுபா சந்திரசேகர், திருப்பூர் சுப்பையன், நாமக்கல் நக்கீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்து விவாதித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றினார்கள், சமூக நீதி சட்ட போர் குறித்து மூத்த வழக்கறிஞர் திரு வில்சன் எம்பி அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள், குழுவின் செயலாளர் பாலவாக்கம் சோமு அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தீர்மானம் 1
நாடு போற்றும் நல்லாட்சி நாயகராய் கொரோனா பெருந்தொற்று காலங்களில், நோய்த்தொற்றில் இருந்து தமிழக மக்களை கண்ணிமை போல் காத்தும், கொரோனா நிவாரண நிதி மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கி,பொருளாதார ரீதியாக அவர்களை காத்த மாண்பாளர், குறிப்பாக, தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில், நோய்த்தொற்றுக்கால முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி, காணொளி அரங்கக் கூட்டங்கள் வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மாபெரும் வெற்றியினைப் பெற்றுத்தந்த நமது மாண்புமிகு முதல்வரும், நம் கழகத் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழகமெங்கும் நேரடி பரப்புரை மேற்கொண்டு கழகத் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உத்வேகம் அளித்து, பெருவாரியான வாக்குகளை கழகம் ஈட்ட காரணமான கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், அன்பு சகோதரர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கழக சட்ட திட்ட திருத்த குழு நன்றி தெரிவிக்கும் முதல் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றுகிறது.
தீர்மானம் 2
மார்ச் 1 ல் 70-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் கழகத் தலைவரும் – தனது “திராவிட மாடல்” ஆட்சியின் மூலம் நாளைய இந்திய ஒன்றியத்தை வழிநடத்தவிருப்பவருமான, நமது மாண்புமிகு முதல்வர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தந்தை பெரியாரைப் போல, பேரறிஞர் அண்ணாவைப் போல, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரைப் போல மேன்மேலும் மக்களுக்கு தொண்டாற்றி வானமே எல்லை என்பதற்கு ஒப்ப புகழ் பரப்பி, தமிழ் சமுதாயத்திற்கு தொண்டாற்றிட வேண்டுமென விரும்பி கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு கிடைத்திட சட்டப்போராட்டம் மேற்கொண்ட, கழக சட்ட திட்ட திருத்த குழு செயலாளர், மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன், எம்.பி., அவர்களுக்கு தக்க ஆணைகள் பிறப்பித்து, ஆலோசனைகள் வழங்கி, ஆக்கமும் ஊக்கமும் நல்கியதன மூலம், உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்று, மருத்துவ படிப்புகளில் 4022 இடங்களும், பல் மருத்துவ படிப்புகளில் 1000 இடங்களும் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இந்திய துணைக்கண்டத்தில் ” சமூக நீதியின் தலைவராக “பரிணாமம் பெற்றுள்ள (கழக சட்டதிட்ட திருத்த குழுவின் 1.8.2020 தேதியில் கானொலி கூட்டத்தில் ” இந்திய சமூக நீதியின் பாதுகாவலர் ” என்று தலைவரை அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது) நம் பெருமைமிகு முதல்வரும், கழகத் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தொய்வில்லாத சமூகநீதிக்கான அளப்பரிய பணிகளுக்காக இக்கூட்டம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 4
தமிழகத்தில் மாண்புமிகு முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற 9 மாத காலத்தில், சமூகம், பொருளாதாரம், கல்வி, இவையனைத்தையும் உள்ளடங்கிய அனைத்து சமூகங்களையும், அணைத்து மாவட்டங்களையும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியான ” திராவிட மாடல் ” ஆட்சியினை, தமிழகத்தில் நிறுவிக் காட்டி, சமூகநீதி விழுமியங்களை தன் மதிநுட்ப அரசியலால் வென்று, தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளில் சமத்துவம் காண, நடவடிக்கைகளை எடுத்து, வரும் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய பாராளுமன்ற தேர்தலில் ” சமூகநீதி தலைவராய் ” விளங்கி, திராவிட மாடல் ஆட்சியினை பறைசாற்ற, இந்திய ஒன்றியத்தின் பிரதமர் அளவில், இந்திய தேசிய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள நமது தலைவர் அவர்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றுகிறது.மேலும், கடந்த 26.1.2022ல் நமது கழக சட்ட திட்ட திருத்த குழு ஏற்பாடு செய்திருந்த, அகில இந்திய அரசியல் இயக்க முன்னோடிகள் மற்றும் சமூக நீதி செயற்பாட்டாளர்கள் பங்கெடுத்து, 27 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் நீதிமன்ற உத்தரவு குறித்த கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய நமது மாண்புமிகு தலைவர் அவர்கள் நமது குழுவின் செயலாளர், மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்களை ” சமூக நீதிப் போராளி ” என்று அடைமொழியிட்டு பெருமைப்படுத்தியது எங்கள் குழுவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இந்தியா முழுவதும் உள்ள சமூகநீதி செயல்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, நலிந்த, ஏழை ,எளிய மக்கள் ,அனைவரும் நம் தலைவரின் சமூக நீதி சித்தாந்ததை ஏற்று திமுகவுடன் பயனிக்க விரும்புவதால் நம்ம கழகத்தை சட்டப்படி ” அகில இந்திய திராவிட முன்னேற்ற கழகம்” என்று அழைப்பது சாலசிறந்தது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 5
உச்ச நீதிமன்றத்தில் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இதன் காரணமாக, தங்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில்லை என்ற வருத்தம் பொதுமக்களிடம் உள்ளது . இதனைக் களைய இந்தியாவை நான்கு மண்டலங்களாக பிரித்து உச்சநீதிமன்றத்தின் நிரந்தர கிளைகள் டெல்லி மும்பை சென்னை கொல்கத்தா ஆகிய நான்கு இடங்களில் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து மா நிலங்களவையிலும் மக்களவையும் வலியுறுத்தி வரும் கழத்தின் குரலை ஐந்தாவது தீர்மானமாக நிறைவேற்றுகிறோம்!
மேற்குறிப்பிட்ட ஐந்து தீர்மானங்களையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
***

You may also like...