ஊதியம் பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த போலீஸ்காரரை அதிகாரிகள் மிரட்டுவது துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வக்கீல் ஜாஜ்வில்லியம்ஸ்

சென்னை, பிப்.-

ஊதியம் பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த போலீஸ்காரரை அதிகாரிகள் மிரட்டுவது துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தொகை

சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்பவர் எஸ்.ராஜா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘2002 ஆகஸ்டு மாதம் காவலராக பணியில் சேர்ந்தேன். 6-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில், தவறாக ஊதியத்தை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் எனக்கு கூடுதலாக வழங்கிய 56 ஆயிரத்து 363 ரூபாயை பிடித்தம் செய்ய 13-வது பட்டாலியனின் கமாண்டென்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், என்னுடன் பணியில் சேர்ந்த பிரகாசம் என்ற போலீஸ்காரருக்கு அதே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, ஊதியத்தை பிடித்தம் செய்ய கமாண்டென்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

அதிகாரி ஆஜர்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத், 2 போலீஸ்காரர்களுக்கு 2 விதமான ஊதியம் நிர்ணயித்தது எப்படு? என்பதை கமாண்டென்ட் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் கோரிக்கை விடுத்தார். அப்போது கமாண்டென்ட் அய்யாசாமி ஆஜராகி இருந்தார்.

மிரட்டுவதா?

அவரிடம் நீதிபதி, ‘‘ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்த 2 போலீஸ்காரர்களுக்கு எப்படி வெவ்வேறு ஊதியம் நிர்ணயிக்க முடியும்? எந்த அடிப்படையில் மனுதாரரின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? என்ற விளக்கத்தை கேட்கத்தான் உங்களை (கமாண்டென்ட்) நேரில் ஆஜராக உத்தரவிட்டேன். பொதுவாக அதிகாரிகளுக்கு பல வேலைகள் இருக்கும். அதனால் அதிகாரிகளை ஆஜராக சொல்வது இல்லை. ஆனால், சரியான விளக்கம் அரசு தரப்பு வக்கீலிடம் இருந்து வராதபோது, சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் ஆஜராக எப்போதாவது உத்தரவிடுவது உண்டு. அவ்வாறு உத்தரவிட்டதற்காக போலீஸ்காரரை மிரட்டுவதா? ஊதியம் தொடர்பாக வழக்கு தொடர போலீஸ்காரருக்கு உரிமை இல்லையா. 2012-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது மனுதாரர் வாபஸ் பெறுவதாக கூறினால், அவரை மிரட்டியதாகத்தானே அர்த்தம். இது மிக மிக துரதிர்ஷ்டவசமானது’’ என்று கருத்து கூறினார்.

ஐகோர்ட்டு வேடிக்கை பார்க்காது

அதற்கு அதிகாரி தரப்பில் மனுதாரரை மிரட்ட வில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. இதை ஏற்காத நீதிபதி, ‘‘இந்த வழக்கு தொடர்ந்ததற்காக மனுதாரர் வேலையில் ஏதாவது இடையூறு செய்தால், இந்த ஐகோர்ட்டு அதை வேடிக்கை பார்க்காது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து (சூமோட்டா) வழக்கை விசாரணைக்கு எடுக்கப்படும். மனுதாரரும் தனக்கு ஏதாவது உயர் அதிகாரிகளால் தொந்தரவு ஏற்பட்டால், எப்போது வேண்டுமானாலும் இந்த ஐகோர்ட்டை நாடலாம். இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்து, வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.

…………..

You may also like...