ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் எட்டு ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் எட்டு ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என, 2011ம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்த சுற்றறிக்கை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில், 2020ம் ஆண்டு முதல் புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கொரோனா பேரிடர் காரணமாக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாததால், புதிய வாகனங்களை பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதலில் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், போக்குவரத்து ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசின் உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசாணை பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் , அப்போது கொரோனா இல்லாத நிலையில் தற்போதைய சூழலை சாதகமாக்கி மனுத்தாக்கல் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது.

அரசாணையை அமல்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து ஓட்டுனர் பள்ளி உரிமையாளர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவர்களது மனுவில், 2011ஆம் ஆண்டு சுற்றறிக்கையை எதிர்த்து தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், ஆனால் இப்போதுதான் வாகனங்களை மாற்ற நிர்பந்திக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பயிற்சி பள்ளிகள் இயங்கவில்லை எனவும், வாகனங்களை மாற்றும்படி வற்புறுபுத்தக்கூடாது என உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...