கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அருள் ராஜ் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கிராமங்களில் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு, அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் தடுப்பது, அரசின் திட்டங்களை மக்களைச் சென்றடையச் செய்வது, மணல் கொள்ளையை தடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கடந்த ஏப்ரல் 25ம் தேதி படுகொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதைப் போல, கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

அரசு ஊழியரான கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட பின் இழப்பீடு வழங்குவதால் எந்த பலனும் இல்லை எனக் கூறி, பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி கடந்த மே மாதம் அளித்த விண்ணப்பங்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

You may also like...